இந்தியா
திருப்பதி கோவில்

திருப்பதிக்கு தமிழக பக்தர்கள் வாத்தியங்களுடன் செல்ல அனுமதி மறுப்பு

Published On 2022-04-17 05:31 GMT   |   Update On 2022-04-17 05:31 GMT
திருப்பதிக்கு நடைபாதை வழியாக வாத்தியங்களுடன் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி மறுத்தனர்.

திருப்பதி:

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அளிக்கப்பட்டு வந்த டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனால் திருமலைக்கு பக்தர்கள் பலர் நடை பாதை வழியாக சென்று வைகுண்டம் அறைகளில் காத்திருந்து ஏழு மலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் பஜனை பாடல்கள் பாடிய படி வாத்தியங்களுடன் திருப்பதி அலிபிரி நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருமலைக்கு வாத்தியங்களுடன் செல்லக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.

இதனால் பக்தர்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. நடைபாதை வழியாக பஜனை செய்து கொண்டு செல்வது பக்தர்களின் உரிமை அதை தடுக்க தேவஸ்தானத்திற்கு உரிமை இல்லை என்று வாதிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அவர்களை பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதையறிந்த சித்தூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி பானுபிரகாவ் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். இதையடுத்து தமிழக பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

திருப்பதியில் நேற்று 76,426 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31.574 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.62 கோடி உண்டியல் வசூலானது.

திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் சுமார் 15 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.

இதையும் படியுங்கள்... இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பதா?- கவர்னர் தமிழிசை வேதனை

Tags:    

Similar News