செய்திகள்
மழை பாதிப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை பாதிப்பு பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு- நிவாரண உதவிகளை வழங்கினார்

Published On 2021-11-28 05:53 GMT   |   Update On 2021-11-28 05:53 GMT
ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயல், அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணவும் விரிவான திட்டம் வகுக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக மழை மிக அதிகமாக பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததுடன் சாலைகளிலும் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. தாம்பரம், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் ரோட்டுக்கு மேல் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி, கூடுவாஞ்சேரி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

ஆவடி பகுதியில் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து இருந்தது.

இதையறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட இன்று காலையில் திருவேற்காடு பகுதிக்கு சென்றார்.

அங்கு மழை வெள்ளத்தில் நடந்து சென்று பார்வையிட்ட பிறகு பத்மாவதி நகருக்கு சென்றார்.



அவருடன் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உடன் சென்று வெள்ள பாதிப்பு பகுதிகள் பற்றி விளக்கி கூறினார். மழையால் பாதிப்படைந்து அங்குள்ள ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை 
மு.க.ஸ்டாலின்
 வழங்கினார்.

பொது மக்கள் சொன்ன குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு ஆவடி பகுதிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மழைநீரில் நடந்து சென்று அவற்றை வடிய வைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

அங்குள்ள ஸ்ரீராம் நகர், திருமுல்லைவாயல், கணபதி நகர் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

அங்கிருந்து பூந்தமல்லி அம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். வெள்ள நீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயல், அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணவும் விரிவான திட்டம் வகுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புறநகர் பகுதிகளில் வெள்ள சேதம் குறித்து கணக்கெடுக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். எவ்வளவு வீடுகள் சேதம் அடைந்துள்ளது? என்ற விவரங்களை விரிவாக தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு பணிகள் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
 வீடு திரும்பினார். முன்னதாக நேற்று இரவும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தி.நகர் பகுதியில் மழைநீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.


Tags:    

Similar News