செய்திகள்
தேஜஸ் ரெயில்

சதாப்தி, தேஜஸ் ரெயில்களில் 25 சதவீத கட்டண குறைப்பு - ரெயில்வே முடிவு

Published On 2019-08-28 00:13 GMT   |   Update On 2019-08-28 00:13 GMT
சதாப்தி, தேஜஸ், கேட்டிமன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில், டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க, கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

ரெயில்களை இயக்க தனியாரை அனுமதிப்பதற்கு முதல்படியாக, டெல்லி-லக்னோ, ஆமதாபாத்-மும்பை ஆகிய வழித்தடங்களில் 2 தேஜஸ் ரெயில்களை ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில்களை அக்டோபர் மாதம் ஐ.ஆர்.சி.டி.சி. இயக்க தொடங்கும்.

இந்நிலையில், இந்த வழித்தடங்களில் விமான கட்டணத்தை விட 50 சதவீதத்துக்கும் குறைவாகவே தேஜஸ் ரெயில் கட்டணம் இருக்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என யாருக்குமே கட்டண சலுகை கிடையாது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகளுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும். அதே சமயத்தில் எல்.இ.டி. டி.வி., தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இடம்பெற்று இருக்கும்.

இதற்கிடையே, பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் சதாப்தி, தேஜஸ், கேட்டிமன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில், டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க, கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.

ஏ.சி. இருக்கை வசதி, எக்ஸிகியுட்டிவ் இருக்கை வசதி ஆகியவற்றுக்கு அடிப்படை கட்டணத்தில் இந்த தள்ளுபடி அளிக்கப்படும். இருப்பினும், ஜி.எஸ்.டி., முன்பதிவு கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம் உள்ளிட்டவை தனியாக விதிக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News