செய்திகள்
பணம் பறிப்பு

கொடைக்கானலில் வியாபாரிகளிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் மர்ம நபர்

Published On 2021-11-21 07:13 GMT   |   Update On 2021-11-21 07:13 GMT
கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு அலுவலர் போன்று செல்போனில் பேசி நூதன முறையில் மர்ம நபர் வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் ஏராளமான உணவு விடுதிகள் மற்றும் மளிகைக் கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக உணவு விடுதி மற்றும் மளிகைக்கடை உரிமையாளர்களிடம் நான் உணவு பாதுகாப்பு அலுவலர் பேசுகிறேன் என்று கூறி உங்களை எனக்கு நன்றாக தெரியும் என்றும், தான் தற்போது வெளியூரில் இருப்பதாகவும் வாகனத்திற்கு டீசலுக்காக பணம் வேண்டும் என கேட்டு செல்போன் மூலம் பணம் பறிக்கும் செயலில் மர்ம நபர் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இவரது பேச்சை உண்மை என நம்பி கொடைக்கானலில் 10-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கூகுல் பே, போன் பே மூலமாக பணம் செலுத்தி ஏமாந்து உள்ளனர்.

மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர் போன்று பணம் கேட்கும் ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் போன்று போனில் பேசி பணம் கேட்கும் மர்ம நபரிடம் வணிகர்கள் யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த மர்ம நபர் தனது செல்போனை பயன்படுத்தினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதிகளிலுள்ள முன் பின் தெரியாத பெட்டி கடைக்காரர்களிடம் லாவகமாக பேசி அவர்களுடைய கூகுல் பே, போன் பே உள்ள செல்போன் எண்களை வாங்கி நூதனமுறையில் கொடைக்கானல் வணிகர்களிடம் இந்த எண்ணுக்கு பணத்தை அனுப்பும்படி கூறி உள்ளார். பின்னர் பெட்டிக்கடைக்காரர்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News