செய்திகள்
கோப்புப்படம்

பல்லடம் கறிக்கோழி விலை வீழ்ச்சி

Published On 2019-12-03 11:28 GMT   |   Update On 2019-12-03 11:28 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த சில வாரங்களாக சீராக இருந்த கறிக்கோழி கொள்முதல் விலை தற்போது கார்த்திகை மாத நுகர்வுகுறைவால் விலை குறைந்துள்ளது.
பல்லடம்:

பல்லடம் பகுதியில் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக வந்த கோழிப்பண்ணை தொழில் தற்பொழுது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

கோழிப்பண்ணைத்தொழில் இரண்டு வகையானது. முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒருவகை. மற்றொன்று கறிக்கோழி வகை. பல்லடம் பகுதியில் உள்ள கோழி பண்ணையாளர்கள் கறிக்கோழி வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிக்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சீராக இருந்த கறிக்கோழி கொள்முதல் விலை தற்போது கார்த்திகை மாத நுகர்வுகுறைவால் விலை குறைந்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள், முருகபக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை மற்றும் பழனிமலைக்கு யாத்திரைக்கான விரதத்தை தொடங்குவார்கள். மேலும் கார்த்திகை தீபம் பண்டிகை வருவதாலும் பொதுமக்கள் பலர் அசைவத்தை தவிர்த்துவிடுவார்கள். இதனால் பெருமளவில் இறைச்சி நுகர்வு குறைந்துவிடும்.

இதன்படி தற்போது கறிக்கோழி இறைச்சி நுகர்வு குறைந்து விட்டதால் கறிக்கோழி பண்ணை கொள்முதல்விலை சரிவடைந்துள்ளது. கடந்த 23.11.2019 அன்று கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ ரூ.96ஆக இருந்தது. அது படிப்படியாக குறைந்து நேற்று கொள்முதல் விலை கிலோ ரூ.84 ஆக குறைந்தது. கார்த்திகை மாதம் இன்னும் 15 நாட்களில் முடிந்துவிடும். பிறகு கறிக்கோழி விலை உயரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் கறிக்கோழி பண்ணையாளர்கள்.
Tags:    

Similar News