செய்திகள்
திருப்பத்தூர் அருகே மேல் அச்சமங்கலம் கிராமத்தில் எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடிய காட்சி.

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 33 பேர் காயம்

Published On 2021-01-23 12:46 GMT   |   Update On 2021-01-23 12:46 GMT
திருப்பத்தூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 33 பேர் படுகாயம் அடைந்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரை அடுத்த மேல்அச்சமங்கலம் கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. ஊர் கவுண்டர் ஆர்.மகேந்திரன், தர்மகர்த்தா எச்.தேவராஜ், ஆகியோர் தலைமை தாங்கினர். எருது விடும் திருவிழாவை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைவர் சி.செல்வம், கே.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

எருது விடும் விழாவில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, வாணியம்பாடி, ஆம்பூர், குருசிலாப்பட்டு, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் இருந்து 200 காளைகள் பங்கேற்றன. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின.

காளைகள் ஓடும் பகுதியில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இளைஞர்கள் அதைத்தாண்டி உள்ளே வந்து காளைகளை உற்சாகப்படுத்த அதன் முதுகின் மீது அடித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் காளைகள் ஓடுவதற்கு இடையூறு ஏற்பட்டது. எனவே போலீசார் சென்று அவர்களை தடுப்புக்கு வெளியே செல்லுமாறு கூறினர். அப்போதும் சில இளைஞர்கள் அங்கேயே நின்றதால், சிறிதுநேரம் எருதுவிடுவதை நிறுத்தி வைத்து, லேசான தடியடி நடத்தினர்.

காளைகள் ஓடிவரும் பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது மாடுகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட தூரத்தை மிகக்குறைந்த வினாடிகளில் ஓடி கடந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.44ஆயிரம் வழங்கப்பட்டது. 33 ரொக்கப் பரிசுகள் உள்பட மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளும் பரிசாக வழங்கப்பட்டன.
Tags:    

Similar News