செய்திகள்
யானை

பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி

Published On 2020-11-08 04:04 GMT   |   Update On 2020-11-08 04:04 GMT
பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை குடியிருப்புக்குள் மீண்டும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே உள்ள கோக்கால் பகுதியை சேர்ந்த கமலாட்சி என்ற பெண் அப்பகுதியில் உள்ள நீரோடையில் துணி துவைக்க சென்றபோது காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்கக்கோரி போராட்டம் நடத்த முயன்றனர்.

பின்னர் போலீசார், வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோக்கால் மலையடிவாரத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானையை விரட்டி அடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் ஊருக்குள் மீண்டும் வராத வகையில் காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 5 மணிக்கு தனியார் தேயிலை தோட்டம் வழியாக மேல் கூடலூர் பஜாருக்குள் காட்டு யானை புகுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காட்டு யானையை கண்டதும் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் காட்டு யானை ஓ.வி.எச்.சாலை வழியாக நடந்து சென்று கோக்கால் பகுதியை அடைந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

தொடர்ந்து சிலர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டுயானை அங்கேயே முகாமிட்டிருந்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு கோக்கால் மலையடிவாரத்துக்கு காட்டு யானை சென்றது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். சம்பவம் நடந்து சில தினங்கள் மட்டுமே வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். ஆனால் மீண்டும் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. எனவே காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வராத வகையில் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த காட்டு யானையை முதுமலை வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News