சிறப்புக் கட்டுரைகள்
தொட்டி கட்டிய வீடு

தொட்டி கட்டிய வீடு சுகம்?- ஜோதிடச்சுடர் எம்.எஸ் இராமலிங்கம்

Published On 2022-01-18 10:49 GMT   |   Update On 2022-01-18 12:52 GMT
நடுமையப் பாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி பள்ளமான பகுதிக்கு மேற்கு பாகத்தில் அமைந்துள்ள அறைகள் வாஸ்துவின் அடிப்படையில் அனேக நன்மைகள் செய்யும்.


ஒரு காலத்தில் கிராமப்புறங்களில், குறிப்பாக, காரைக்குடி வட்டாரங்களில் மற்றும் கோயமுத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் இது போன்ற வீடுகள் இருந்தன, பார்த்திருக்கலாம்.

அதாவது, ஒரு பெரிய வீடுகட்டி, அந்த வீட்டின் பிரம்ம ஸ்தானம் எனும் மையப்பகுதியில் வெட்ட வெளிவிட்டு, சூரிய தேவனின் வெயில் ஆனாலும் சரி, வருணபகவானின் மழை நீரானாலும் சரி, வீட்டின் மையப் பகுதிக்குள் விழும்படி, வீட்டைக் கட்டியிருப்பதைக் காணலாம்.

இப்படியாகக் கட்டப்பட்ட இந்த வீட்டின் நான்கு திசைகளிலும் அறைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதையே தொட்டிக் கட்டி வீடு என்பார்கள், இதில் தொட்டி என்று ஏன் சொன்னார்கள் எனில், மையப்பகுதியில் மேலிருந்து, தரைத்தளம் வரை திறந்த வெளியாக இருப்பது மட்டுமின்றி, அந்தக் குறிப்பிட்ட மையப்பகுதியானது தரைத்தளத்தில் மற்ற பாகங்களை விட ஒரு அடி பள்ளமாகவும் இருக்கும். பார்ப்பதற்கு மையப்பகுதியில் தொட்டி போல் அமைந்திருக்கும், இந்த மாதிரி வீடுகளின் நன்மை தீமைகள் பற்றி காண்போம்.

இந்த மாதிரி அமையப்பட்ட வீடு கிழக்கு நோக்கி அமைந்திருந்தால், வடகிழக்கில் தலை வாயிலும், தென்கிழக்கில் சமையல் அறையும், சமையல் அறைக்கு வடபாகம் முழுவதும் அமர்ந்து உரையாட நாற்காலிகள் மற்றும் ஊஞ்சல், வேளாண் பொருட்களைப் போட்டு வைக்குமிடமாகவும் சமையல், அறையை ஒட்டியது போல், சமையல் அறையின் மேற்கில் ஒரு அறையும், அதனை ஒட்டி, தென்மேற்கில் ஒரு அறையும், நடு மேற்கில் ஒரு அறையும், வடமேற்கில், மைய நடு வடக்கில் அறைகள் எனவும், இதற்கு மையபாகத்தில், சதுரவடிவில் திறந்த வெளி கொண்ட தரைத்தளம் பள்ளமாகவும் இருக்கும்படி கட்டி இருப்பார்கள்.

இப்படியாகக்கட்டப்பட்ட வீடுகளின் நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்கிறபோது எப்போதும், கிழக்கு நோக்கிய வீட்டுக்கு வடகிழக்கில் தலைவாசல் மிகமிக ஏற்புடையதே. தென்கிழக்கு சமையல் அறையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.

ஆனால் கிழக்கு பாகத்துக்கு மேற்குப் பக்கத்தில், நடுவீட்டில் பள்ளம் இருப்பது வாஸ்துவின்படி கொடிய தோ‌ஷமாகிறது.

ஆனால், சில காலம் அந்தக் குடும்ப நபர்கள் சுகம் பெறலாம். ஏனெனில் நடுமையப் பாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி பள்ளமான பகுதிக்கு மேற்கு பாகத்தில் அமைந்துள்ள அறைகள் வாஸ்துவின் அடிப்படையில் அனேக நன்மைகள் செய்யும்.

 


அதாவது மேற்குபாகம் உயர்ந்தும் மேற்கு பாகத்தில் உள்ள அறைகளுக்கு முன் உள்ள கிழக்கு பாகம் பள்ளமாக இருப்பதும் வாஸ்துவின் படி அதி உத்தமம்.

மேலும், இது போன்ற வீட்டில் தெற்கில் மேற்கில் வேறு வாசல் இருந்தால் மிக மோசமான கஷ்டங்களையே தரும்.

ஆனால், இதுபோன்ற வடகிழக்கில் கிழக்கு பார்த்த வீட்டுக்கு, வடக்கு பார்த்த இரண்டாவது தலைவாசல் இருப்பது, வாஸ்து தோ‌ஷத்தை பெருமளவுக்கு குறைக்கும்.

இப்படியான கிழக்கு நோக்கிய தொட்டி கட்டிய வீடுகளில் வாழ்பவர்கள் ஒரு தலைமுறை போல், அடுத்துவரவுள்ள தலைமுறையினர் சிறப்பாக வாழ முடிவதில்லை என்ற யதார்த்தமான ஒரு சூழல் இருப்பதாகவே தெரிகிறது. இல்லையேல் முக்கியமுடிவுகள் எடுப்பதை வீட்டின் மேற்கு பாகத்தில் வைத்துக் கொள்வது நல்ல மாற்றம் தரும்.

இதுபோல ஒருவேளை இந்தத் தொட்டி கட்டிய வீடானது தெற்குநோக்கி இருக்குமானால், தென்கிழக்கில், தெற்கு நோக்கித்தான் தலைவாசல் இருக்கும்.

ஏனெனில் இதுவே உச்சஸ்தாணம் ஆகும். இப்படியான வீட்டில் தெற்கில், மேற்கில், வடக்கில், கிழக்கில் அறைகள் அமைந்து, நடுமையான பிரமஸ்தானத்தில் கூரையில் திறந்த வெளியும், தரைத்தளத்தில் பள்ளமுமாய் அமைந்து இருக்கும்.

இந்த தெற்கு பார்த்த வீட்டில் குறிப்பாக தெற்குத்திசையும், மேற்குத்திசையும் அதிர்ஷ்டமான அமைப்பாக விளங்குகிறது. வடக்கும், கிழக்கும் பள்ளமாக இருப்பது சிறப்பு என்ற விதிகளின்படி தெற்கும், மேற்கும் அதிர்ஷ்டமான பகுதிகளாக விளங்குகிறது.

வடக்கும், கிழக்கும் அதிர்ஷ்டம் குறைந்த பகுதிகளாக அமைகிறது. குறிப்பாக தென்மேற்கு அறையில் குடும்ப முக்கிய உறுப்பினர் தங்குவது அல்லது அந்த தென்மேற்கில் அமர்ந்து, முக்கிய முடிவுகள் எடுப்பது, வந்தவர்கள் அமர இடம் ஒதுக்குவது மிக நன்மை தரும்.இது போன்ற அமைப்பு குடும்பத்துக்கு அனேக வெற்றிகளைத் தரும்.

இதுபோல, இந்த வீட்டின் நேர் எதிர் வடக்குத் திசையான குபேர மூலையில் அறை அமைந்து அதில் அலுவலகமோ, முக்கிய முடிவுகள் எடுக்கும் இடமாகவே அமைந்தால் மிகக் கடுமையான மோசங்கள் வந்து சேரும். காலப்போக்கில் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், குடும்பம் பொருளாதார ரீதியாக அவமானப்படும், மேலும் அங்கு வாழும் மனிதர்கள் இயற்கைக் சீற்றங்களால் பாதிக்கப்படும் நிலையுண்டாகும். அங்கு அமர்ந்து போட்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும்.

இப்படியான, குழப்பங்களில் இருந்து விடுபட, முடிந்த மட்டும், வடக்கு மற்றும் கிழக்குச் சுவர்களில் பெரிய ஜன்னல்கள் வைக்கப்படும். கூடவே அது பெரும்பாலும் திறந்த நிலையில் இருப்பதும் ஓரளவு நன்மை தரும்.

மேலும், வீட்டின் வெளிப்பாகத்தில் வீட்டின் வடக்கில் அல்லது கிழக்கில் நீச்சல் குளம் அமைப்பதும் அல்லது சந்து பள்ளமாக திறந்த வெளிப்பகுதியை உண்டாக்கி கொள்வதும் வாஸ்துவின்படி உண்டாக்கும் தோ‌ஷத்தைக் குறைக்கும்.

இதுபோலவே மேற்கு நோக்கிய, தொட்டிக்கட்டிய வீடாக இருந்தால், உச்சஸ்தானமாகிய, வடமேற்கில், மேற்கு பார்த்துதான் தலைவாசல் இருக்கும்.

தலைவாசலின் இடதுபுறமான தெற்கு பகுதி அறைகள் கொண்டதாக இருக்கலாம். இந்த வீட்டின் அதிர்ஷ்டமான இடமாக இந்த தென்பகுதியைக் கருதலாம். அதிகபட்சமாக தெற்கு எல்லை வரையும், அதாவது தென்மேற்கு பாகத்தின் கடைசிவரை மிகச் சிறந்த பகுதி ஆகும்.

இந்த பாகம் முழுமைக்கும் நிர்வாக முடிவுகள் எடுப்பது, படுக்கை அறைகள் என்ற அமைப்பு மிக உத்தமம்.

தென்மேற்கு மூலையில் சாமி அறை எனும் பூஜை அறை அமைவது மிக விசேசமாகும். அதனை ஒட்டிய தென்மேற்கு படுக்கை அறையானது, அந்தக் குடும்பத்தை ஆளும் குடும்பத் தலைவன், தலைவி உறையுமிடமாக வரவேண்டும். அதனை ஒட்டி, வடமேற்கு வரை பிள்ளைகள் மற்றும் குடும்ப பிற உறுப்பினர்கள் பயன்பாட்டுக்கு உத்தமம்.

சரியாக, தென்பகுதியிலும் படுக்கை அறை அமையலாம். இது குடும்பத்தின் இளம் வாரிசுகள் வீரியமாகவும், விவேகமாகவும் வளர உதவும்.

தென்கிழக்கில் சமையல் அறை உத்தமம். வீட்டின் மையமான பிரம்மஸ்தானமான மையப்பகுதி, கிழக்கையும், மேற்கையும் பிரிக்கிறது. எனவே பிரிக்கப்பட்ட கிழக்கு பாகம் வாழ்வியலுக்கு உகந்ததல்லாமல் தரம் குறைந்தே இருக்கும்.

பொதுவாக கிழக்கும், வடக்குமே வாஸ்துபடி சிறந்த இடங்களென்றால், குறிப்பாக இந்த தொட்டி கட்டிய வீட்டில், கிழக்கு பாகம் மற்றும் வடக்கு பாகம் தரம் குறைந்த பாகமாக அமைகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, மேற்கு பார்த்த இப்படியான வீட்டில், கிழக்குப் பக்கத்தில் அமைந்த அறைகள் விருத்திகளைச் செய்வதில்லை, வடகிழக்கு மூலையில் பூசை அறை அமைப்பது கூட இப்படியான வீட்டுக்கு தரித்திரத்தையே தரும். மேலும், இம்மாதிரியான வீடுகளில் வசிக்கும் நபர்களில் வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை பாதகம் ஏற்பட்டு, கடைசி காலங்களில் சற்று அவஸ்தைப்படுவதாக அமைந்துவிடுகிறது.

வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் குடும்பத் தலைவர் உறங்குவது போன்ற பயன்பாட்டுக்கு வைத்திருந்தால், தொழில் நட்டம், அவப்பெயர், மன நிம்மதி பறிபோவது போன்ற அம்சங்கள் உண்டாகிவிடுகிறது.

மழைகாலத்தில் பெய்யும் மழைநீரானது, மையப்பாகமாகிய திறந்தவெளி வழியாக வீட்டின் பிரம்மஸ்தானத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து, அங்கிருந்து கிழக்கு நோக்கித்தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்.

இவ்வாறாக குறைந்தபட்ச விதிகளையேனும் உபயோகப் படுத்திக் கொண்டால் வாஸ்து தோ‌ஷத்திலிருந்து விலகி வாழலாம்.

நிறைவாக உங்களது இம்மாதிரியான வீடானது வடக்கு பார்த்தபடி அமைந்திருந்தால், வடகிழக்கு மூலையில் வடக்கு நோக்கி தலைவாசல் அமைந்திருக்கும்.

பொதுவாக வடக்கு பார்த்த வீடு என்றாலே, வாஸ்து குறைபாடின்றி, வீட்டை அமைக்கலாம் என்று முன்பு சொல்லியுள்ளேன்.

ஆனால், இவ்வாறான தொட்டிக்கட்டிய வீட்டுக்கு இந்த விதி முரணானதுதான். ஏனெனில், வீட்டின் வடபாகம், கிழக்குப்பாகம் பகல் பொழுது வாழ்வுக்கும், தென்பகுதி மற்றும் மேற்குப்பகுதி வாழ்வியலில் இரவுப் பொழுது வாழ்வுக்கும் சிறப்பு சேர்க்கும்.

மேற்குப் பாகமாகிய படுக்கை அறை போன்ற அமைப்பு சரியாக உள்ளதால், இளம் பிள்ளைகள் பிரமாதமாக வளருவார்கள்.

வருமானம் குறைவாக இருந்தாலும், குடும்பத் தலைவர் தவிர, அனைவரும் நன்றாக ஆண்டு அனுபவித்து வருவார்கள்.

பொதுவாகவே, இப்படியான வீடுகளைக் கட்டி குடியிருப்பது என்பது ஓர் சவாலான காரியம்தான். பெரும்பாலும் இவ்வாறான தொட்டிக்கட்டிய வீடுகள் இன்று அனேக இடங்களில் விருத்தியிழந்து தான் இருக் கிறது. எனவே தான் பெரும்பாலானோர் இந்த மாதிரி வீடுகளை விரும்பிக் கட்டுவதில்லை.

Tags:    

Similar News