செய்திகள்
கோப்புபடம்

கடலூர், புவனகிரியில் கொரோனா கட்டுப்பாடு மீறல்: 4 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2020-09-17 07:22 GMT   |   Update On 2020-09-17 07:22 GMT
கடலூர், புவனகிரியில் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 4 கடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
கடலூர் முதுநகர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் முதுநகர் பகுதியில் நேற்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் ஊழியர்கள் இருந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கி, கடை உரிமையாளருக்கு நகராட்சி மூலம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மேலும் முக கவசம் அணியாமல் வேலை பார்த்த கடை ஊழியர்கள் 2 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் அருகில் உள்ள முட்டை கடை, ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார். முக கவசம் அணியாமல் நின்ற ஜெராக்ஸ் கடை ஊழியர்கள் 2 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.

அதன்பிறகு புவனகிரி பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் இருந்த பயணிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் டிரைவர், கண்டக்டர்களிடம் முக கவசம் அணியாமல் வரும் பயணிகளை பஸ்களில் அனுமதிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து சிறிய செல்போன் கடைக்குள் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக இருந்ததை கண்டு, கொரோனா தொற்று பரவுவது குறித்து அறிவுரை வழங்கி, அந்த செல்போன் கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி பேரூராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.

ஆய்வின்போது கடலூர் தாசில்தார் செல்வக்குமார், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News