செய்திகள்
புழு இருப்பதாக கூறப்பட்ட குளுக்கோஸ்

திருப்பூர் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிக்கு ஏற்றிய குளுக்கோசில் புழு

Published On 2019-11-06 05:49 GMT   |   Update On 2019-11-06 05:49 GMT
திருப்பூர் மாநகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய குளுக்கோஸ் பாட்டிலில் புழு கிடந்ததாக வெளியான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன்(வயது 28). ஓட்டல் ஊழியர். இவரது மனைவி தேவி(24).

இவர் கர்ப்பிணியாக உள்ளார். சம்பவத்தன்று தேவியை சிகிச்சைக்காக புதுராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி தாய்சேய் நல விடுதிக்கு அவருடைய கணவர் ஜெகன் மற்றும் தேவியின் சகோதரர் ஜோசப் ஆகியோர் அழைத்துச்சென்றனர்.

அங்கிருந்த டாக்டர், தேவியை பரிசோதித்து விட்டு அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற பரிந்துரை செய்தனர். அங்கிருந்த செவிலியரும் தேவிக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர். அப்போது அந்த குளுக்கோஸ் பாட்டிலில் புழு போன்று மிதந்ததாக கூறப்படுகிறது.

இதை கவனித்த ஜோசப் இதுகுறித்து அங்கிருந்த டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். புழு உள்ள தரமற்ற குளுக்கோசை தனது சகோதரிக்கு ஏற்றியதாக கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு தேவியை அவருடைய சகோதரர் மற்றும் கணவர் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.



இதுதொடர்பான புகார் குறித்து திருப்பூர் மாநகர் நல அதிகாரி பூபதி விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் மூலமாக குளுக்கோஸ் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் தூசு மிதந்ததாக தெரிவித்துள்ளனர். புழு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் அந்த மருத்துவமனைக்கு வந்த குளுக்கோஸ் பாட்டில்கள் அனைத்தையும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு கழகத்தில் பரிசோதனை செய்வதற்காக திருப்பி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறைரீதியான விசாரணையும் தொடர்ந்து நடக்கிறது’ என்றார்.
Tags:    

Similar News