செய்திகள்
அனில் விஜ்

தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற மந்திரிக்கு கொரோனா: பாரத் பயோடெக் நிறுவனம் கூறுவது என்ன?

Published On 2020-12-05 13:42 GMT   |   Update On 2020-12-05 13:42 GMT
'கோவாக்ஸின்' தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
புதுடெல்லி:

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த 'கோவாக்ஸின்' தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இந்த பரிசோதனையில் தன்னார்வலராக  அரியானா  மாநில பா.ஜ.க மூத்த தலைவரும்  அம்மாநில உள்துறை மற்றும் சுகாதார மந்திரியுமான அனில் விஜ் தன்னை உட்படுத்திக்கொண்டார்.  கடந்த 20 ஆம் தேதி அனில் விஜ் உடலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டது. 

இந்நிலையில், அனில் விஜ் தனது டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு தற்போது தொற்று ஏற்பட்டுள்ளது விவாதத்திற்குள்ளானது. 

இதுகுறித்து விளக்கமளித்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 28 நாட்களுக்கு பின்னரே இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பின்னர் தான் தடுப்பூசி கொரோனாவை கட்டுபடுத்துகிறதா என்பதும், அதன் செயல்திறனும் தீர்மானிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோவேக்சின் மருந்து இரண்டு டோஸ்களை கொண்டது. அனில் விஜ் ஒரு டோஸை மட்டுமே போட்டுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News