ஆன்மிகம்
கிருஷ்ணர்

இறைவனின் மனதில் இடம்பிடிக்கும் வழி..

Published On 2021-09-29 08:55 GMT   |   Update On 2021-09-29 08:55 GMT
கணநேரம் கூட தவறாமல் என்னைப் பற்றி சிந்திப்பவர்களுக்கே இறைவனுடைய இதயத்தில் இடம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
மகாபாரதத்தில் கிருஷ்ணனின் உற்ற நண்பனாக இருந்தவன், அர்ச்சுனன். அவனது மகன் அபிமன்யு. கிருஷ்ணருக்கு அடுத்தபடியாக ஒரு போரில் சக்கரம் போல் தடுத்து நிற்கும் படைகளை, உடைத்துக் கொண்டு உள்ளே புகும் வித்தை தெரிந்தவன், அபிமன்யு மட்டுமே. அத்தகைய சிறப்புபெற்ற அபிமன்யுவின் மனைவி பெயர் உத்தரை.

அது மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு சில நாட்கள் முந்தைய தினம். பாண்டவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு வந்த முனிவர் ஒருவர், உத்தரைக்கு மாயக் கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கிச் சென்றார்.

தன் முன்பாக யார் நிற்கிறார்களோ, அவர்களுடைய மனதில் நினைப்பவர்களை அந்தக் கண்ணாடி பிரதிபலிக்கும். அதுதான் அந்தக் கண்ணாடியின் சிறப்பு. திருமணமானது முதல், உத்தரை தனது கணவனையே மனதில் வரித்திருந்தாள். அதனை பரிசோதனை செய்ய இப்போது அவளுக்கு ஆவல் உண்டாது. முதல் ஆளாக அந்த மாயக் கண்ணாடி முன்பாகப் போய் நின்றாள். எதிர்பார்த்தது போலவே அவளது அன்புக் கணவன், அபிமன்யு அதில் தெரிந்தான்.

அதே போல் அபிமன்யுவும் தனது மனைவி மீது தீராக் காதல் கொண்டிருந்தான். அவனைக் கண்ணாடி முன்பாக நிறுத்தியபோது, அதில் உத்தரை தெரிந்தாள்.

அப்போது அங்கு மாயைகளின் மொத்த உருவமான கண்ணன் வந்து சேர்ந்தார். அவரை அந்தக் கண்ணாடி முன்பாக நிறுத்தினால் யார் தெரிவார்கள் என்பது பற்றி அங்கே ஒரு விவாதமே தொடங்கி விட்டது.

‘அவருக்கு உற்றத் தோழன் நான். அதனால் நான்தான் கண்ணாடியில் தெரிவேன்’ என்றான் அர்ச்சுனன்.

‘இந்த உலகத்திலேயே தர்மத்தை காத்து நிற்பவன் என்பதால் கிருஷ்ணன் மனதில் நான்தான் இருப்பேன்’ - இது தருமர்

‘கிருஷ்ணரின் பாசத்திற்கும், அன்புக்கும் உரியவள், தங்கையாகிய நான்தான். அதனால் நான்தான் அந்தக் கண்ணாடியில் வெளிப்படுவேன்’ என்றாள் திரவுபதி. இப்படி ஆளாளுக்கு நான், நீ என்று விவாதித்துக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் கிருஷ்ணரைப் பிடித்து, அந்தக் கண்ணாடியின் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தினார்கள். ஆவலோடு கண்ணாடியைப் பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. ஏனெனில் அதில் தெரிந்தது சகுனி. யார் இந்த நாட்டை விட்டு பாண்டவர்கள் வனத்திற்கு செல்ல காரணகர்த்தாவோ, யாரால் உலகமே அழியும் போர் ஒன்று நிகழப்போகிறதோ, எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ணனை கொன்றே தீருவது என்று யார் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறாரோ அந்த சகுனி, கிருஷ்ணனின் மனதில் இருப்பதைக் கண்டு அனைவரும் திகைத்துப் போயினர். இதுபற்றி அவர்கள் கிருஷ்ணனிடமே கேட்டனர்.

அதற்கு கிருஷ்ணன், “சகுனி, எனக்கெதிராக திட்டங்களைத் தீட்டுபவன்தான். பாண்டவர்களான உங்கள் பக்கம் நிற்பதால், உங்களோடு சேர்த்து என்னையும் அழிக்கத் துடிப்பவன்தான். ஆனால் அதற்காக அவன் எப்போது என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஒருவர் என்னைப் பற்றி நல்லவிதமாக சிந்திக்கிறார்களா, அல்லது கெடுதலை ஏற்படுத்த சிந்திக்கிறார்களா என்பது பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்னைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் என்பதே முக்கியம். கணநேரம் கூட தவறாமல் என்னைப் பற்றி சிந்திப்பவர்களுக்கே என்னுடைய இதயத்தில் இடம் கிடைக்கும். அந்தவகையில்தான் சகுனி என் மனதில் இடம் பிடித்து விட்டான்” என்றார்.
Tags:    

Similar News