செய்திகள்
அமைச்சர் எஸ்பி வேலுமணி

சென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Published On 2020-11-25 03:09 GMT   |   Update On 2020-11-25 03:09 GMT
சென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையத்தில் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு துறைகளின் விவரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து நடைமுறை ஆய்வு செய்து, ஓரிடத்தில் இருந்து அதிகளவு விவரங்களை கையாளும் வகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு மையம் மழையளவு, சுற்றுச்சூழல் தன்மை, வெள்ளத்தை கண்காணிக்கும் உணர்வு கருவி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் வாகன நிறுத்த மேலாண்மை ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தொடங்கியது. இன்று (நேற்று) 38.7 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. இதுவரை 90 மரங்கள் விழுந்து அவை உடனடியாக அகற்றப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 5.9 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 176 நிவாரண மையங்களில் 77 மையங்கள் தயார்நிலையில் உள்ளன.

இன்றைய (நேற்றைய) மழையால் 5 இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் 570 மோட்டார் பம்புகள், மின்சார கம்பம், அறுந்து தொங்கும் மின்கம்பிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகளை மழை காலங்களில் சேதம் அடையாமல் இருப்பதை கண்காணிக்க குழு, 52 இடங்களில் களத்தில் நின்று பணிபுரிய தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், மாநகர பேரிடர் மீட்பு குழுக்கள், மீட்பு குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், துணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News