செய்திகள்
கமல்ஹாசன்

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கமல் - தேர்தல் பணிக்காக குழுக்கள் அமைப்பு

Published On 2019-11-04 10:24 GMT   |   Update On 2019-11-04 10:24 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் புதிய குழுக்கள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. ஒருங்கிணைப்பு பிரிவுக்கான பொதுச் செயலாளராக ஏ.சவுரிராஜன் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.

அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் அதன் பிறகு நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதற்கான காரணமாக அவர் கட்சி நிர்வாகிகள் குறிப்பிடுவது கட்சியை பலப்படுத்தும் வகையில் அவர் கட்சி கட்டமைப்பை உருவாக்கி வருகிறார் என்பது தான்.

2021 பொதுதேர்தலை குறி வைக்கும் கமல் அதற்கு அடித்தளமாக வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலை பார்க்கிறார் என்கிறார்கள்.



இதுகுறித்து கமல் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

கட்சி கட்டமைப்பில் நடக்கும் மாற்றங்கள் என்பது பணிகளை அனைவருக்கும் பிரித்து சமமாக வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் தான். இன்னும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல்களை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் புதிய குழுக்கள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பு பிரிவுக்கான பொதுச் செயலாளராக ஏ.சவுரிராஜன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து சட்டப்பேரவை, பாராளுமன்ற தொகுதிகளுக்கு தனித்தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் கோவை, திருநெல்வேலி, மதுரை மண்டலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். மற்ற மண்டலங்களுக்கு விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

அவர்களுக்கு கீழ், பாராளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிகள், மாநகராட்சி, நகர பஞ்சாயத்து, நகரம், ஒன்றியம், பூத் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் புதிய குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளுக்கு தேர்தல் பணிகள் அனைத்தும் இக்குழுக்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படும். வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் இக்குழுவினர் பணியாற்றுவார்கள். கட்சித் தலைவர் கமல்ஹாசனின் மேற்பார்வை மற்றும் ஆலோசனையுடன் தேர்தல் பணிகளில் இக்குழுவினர் தனித்து செயல்படுவார்கள்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம். மாற்றங்களை உருவாக்கக்கூடிய அதிகாரங்களை கைப்பற்றுவதே எங்களின் நோக்கம்.

அதற்கு உள்ளாட்சி தேர்தல் நல்ல தொடக்கமாக இருக்கும் என்பதால் கட்சி சார்பில் அதிக அளவில் இளைஞர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். இந்த உள்ளாட்சி தேர்தல் அடுத்து கமல் முதல் அமைச்சர் ஆவதற்கான அடித்தளமாக அமையும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

Similar News