செய்திகள்
கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

நீலகிரியில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்

Published On 2021-04-21 16:43 GMT   |   Update On 2021-04-21 16:43 GMT
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார்.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் இன்கோ சர்வ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை செயலாளரும், இன்கோ நிர்வாக தலைமை செயலாளருமான சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து கலெக்டர்இன்னசென்ட் திவ்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். இதற்காக கூடுதலாக கொரோனா பரிசோதனை எந்திரங்கள் தேவைப்படுவதால் தமிழக சுகாதாரத்துறையிடம் கேட்டுள்ளோம். இந்த வார இறுதிக்குள் புதிய எந்திரங்கள் வரும் என நம்புகிறோம்.

மேலும் சோதனைகள் மேற்கொள்ளவும், தடுப்பூசி முகாம்களில் பணியாற்றவும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்பதால் தான் கொரோனா தொற்று அதிக அளவு பரவுகிறது என்பதால் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இந்த கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அந்தந்த கிராம பகுதிகளுக்கே சென்று முகாமிட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் மொத்தம் 1,054 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் சுமார் 420 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

கோவிஷீல்டு தடுப்பூசி தற்போது இருப்பு இல்லை. விரைவாக சுகாதாரத்துறை மூலமாக நீலகிரி மாவட்டத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நீலகிரி மாவட்ட எல்லைகள் இன்னும் மூடப்படவில்லை. ஆனால் சுற்றுலா பயணிகள், நீலகிரி மாவட்டதிற்கு சுற்றுலா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கு வர இ-பாஸ் தேவை இல்லை. ஆனால் இ-பதிவு கட்டாயம் தேவை. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் சங்கர நாராயணன் பிள்ளை, தலைவர் சுமதி சிவராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலுசாமி, துணை இயக்குனர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், நந்தகுமார், தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, அரசு மருத்துவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News