செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2020-10-17 10:06 GMT   |   Update On 2020-10-17 10:06 GMT
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டை விரைந்து பெற ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் அளிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்; அரசு பள்ளி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். சாதித்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்ற நிலையில், அவர்களில் 7.71 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.44% தேர்ச்சி ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசிய சராசரியை விட அதிக அளவாக 57.44% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை விட இது 9 விழுக்காடு அதிகம். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களும், அரசு பள்ளி மாணவர்களும் கணிசமானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720-க்கு 710 மதிப்பெண் எடுத்து 8-ஆவது இடத்தில் உள்ளார். நீட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தமிழக மாணவர் ஒருவர் இத்தகைய சாதனையை படைப்பது இதுவே முதல்முறை. அதேபோல், தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனும், அரசு பள்ளி மாணவருமான ஜீவித் குமார் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால் அவர்கள் சாதிப்பார்கள் என்பதற்கு இதுவே உதாரணமாகும். இந்த சாதனைகள் பிற மாணவர்களையும் சாதனை படைக்க ஊக்குவிக்கும். சாதித்த மாணவர்களை மீண்டும் வாழ்த்துகிறேன்.

மாணவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ள நிலையில், அரசும் அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், ராமதாஸின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அத்துடன் நிற்காமல் அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி, அழுத்தம் கொடுப்பதன் மூலம் 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுனரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News