செய்திகள்
விபத்து

மன்னார்குடி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது- 9 பள்ளி மாணவிகள் காயம்

Published On 2019-11-29 10:36 GMT   |   Update On 2019-11-29 10:36 GMT
மன்னார்குடி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 9 பள்ளி மாணவிகள் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக மாவட்ட கலெக்டர் காலை 8 மணியளவில் விடுமுறை அறிவித்தார்.

இந்நிலையில் வழக்கம் போல் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் மழையையும் பொருப்படுத்தாமல் முன்னதாகவே பள்ளிக்கு புறப்பட்டனர்.

மேலும் கிராமப்புறத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் வழக்கம்போல் பஸ் மற்றும் வேன்களில் மன்னார்குடியில் உள்ள பள்ளிகளுக்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிப்பு உடனடியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

சிலர் பள்ளி செல்லும் வழியில் கிடைத்த தகவலின் பேரில் மழையில் நனைந்தவாறே வீடுகளுக்கு திரும்பினர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு, ஆலாத்தூர் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவிகள் 10 பேர் வழக்கம் போல் வேனில் மன்னார்குடியில் உள்ள தூய வளனார் பள்ளிக்கு புறப்பட்டனர். அப்போது மழையும் பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

வேனை தண்ணீர் குன்னம் பகுதியை சேர்ந்த ராஜீ (வயது30) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். உடன் ராஜேஷ்(29) என்பவரும் சென்றார்.அப்போது வேன் ஆலாத்தூர் மஞ்சவாடி பகுதியில் அய்யனார் கோவில் அருகே வந்தபோது வேனின் டயர் எதிர்பாராமல் வெடித்துள்ளது.

இதனால் வேன் நிலை தடுமாறி அருகில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த மாணவிகளில் 9 பேர் காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மாணவிகளை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தாமதமாக அறிவித்ததாலேயே பள்ளி மாணவிகள் பலர் வழக்கம்போல் பள்ளிகளுக்கு மழையில் நனைந்துவாறே சென்றனர்.

கிராமப்புற மாணவர்கள் வழக்கம்போல் வேனில் சென்றபோது தான் இந்த விபத்து நடந்தது என்று பெற்றோர் குறை கூறினர்.

கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டும், தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுமுறை அறிவிப்பை முன்னதாகவே தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News