ஆன்மிகம்
முக்தி தரும் நாச்சியார் கோவில்

முக்தி தரும் நாச்சியார் கோவில் - கும்பகோணம்

Published On 2019-11-20 01:39 GMT   |   Update On 2019-11-20 01:39 GMT
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.
சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாச முனிவர் நர்மதை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்தார். ஒருநாள் அவர் நதியில் நீராடச் சென்ற சமயம் அழகிய தேவமாது ஒருத்தி தன் தோழிகளுடன் நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகினைக் கண்ட பரத்வாசர் மோகம் கொண்டார். அவர் தம் நிலையையும் மறந்து தேவமாதைக் கட்டி அணைத்தார். அவருடைய மோகம் தணிந்ததும் தேவமாதை விட்டுச் சென்றார்.

தேவமாது ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள். அக்குழந்தையை நதிக்கரையிலே விட்டு தேவலோகம் சென்றாள். பெற்றோரால் கைவிடப்பட்ட அக்குழந்தைதான் அங்காரகன் அவனை பூமாதேவி தன் குழந்தைபோல் வளர்த்து வந்தாள். குழந்தை பெரியவனானதும் தன்னுடைய தந்தையைக் குறித்துக் கேட்டான். பூமாதேவி குழந்தையிடம் விவரத்தைச் சொன்னதுடன் அவனை பரத்வாச முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள்.

செவ்வாய் கிரகத்திற்கு தனி ஆலயம் இல்லை. செவ்வாய், கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்று எடுத்துக் கொள்ளலாம். பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான்.

செவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு நாம் திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இங்கு வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதை காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார் கோவில்’ எனப்பெயர் பெற்று விளங்குகிறது. முற்காலத்தில் இந்த ஊர் ‘திருநறையூர்’ என்று அழைக்கப்பட்டது.

கோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினான். ஆனால் விஷ்ணுவுக்காக கட்டியது திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் மட்டுமே. கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுஒரு மாடக்கோவிலாகும். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.

நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.

சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில், முன்பு மேதாவி என்ற மகரிஷி இருந்தார். இவர் தனக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம் போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. அப்போது அவரது கையில் சக்கரபாணி சுவாமி சிலை கிடைத்தது. அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.

‘முனிவரே! இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த குரல். முனிவரும், தமது எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி நரசிம்ம பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த இடத்தில் வந்து தங்க விரும்பிய மகாலட்சுமி, அங்குள்ள வகுள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாக தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு வகுளாதேவிநாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

வகுளாதேவிக்கு திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத்தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப்பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.

பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது. கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.

48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு. 
Tags:    

Similar News