லைஃப்ஸ்டைல்
சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Published On 2021-08-02 06:22 GMT   |   Update On 2021-08-02 07:40 GMT
சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பது குறித்து சேலம் கோபி மருத்துவமனை டாக்டர்கள் ஜோன்ஸ் ரொனால்ட், ஹரி ஜானகிராமன் ஆகியோர் கூறியதாவது:-
சமீப காலமாக சிறுநீரக நோய்கள் அதிகமாகி வருவது மட்டுமல்ல, அதற்கான சிகிச்சைக்குரிய செலவும் உலக அளவில் அதிகமாகி வருகிறது. 8 முதல் 10 சதவீதம் பேருக்கு சிறுநீரகத்தில் ஏதாவது ஒரு பாதிப்பு இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அறிகுறி இல்லாமல் இருக்கும் சிறுநீரக நோய் படிப்படியாக சிறுநீரக செயல் திறனை குறைப்பதோடு, முற்றிலும் அதன் செயல்பாட்டை இழந்து விடும் நிலைக்கு வந்து விடுகிறது.

அப்படி ஒரு நிலை ஏற்படும் போது உயிர் வாழ டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சிறுநீரக நோயை கண்டுபிடிப்பதன் மூலம் மோசமான நிலையை அடையாமலும், இதன்மூலம் இதய நோய் வராமலும் தடுக்க முடியும்.அதாவது சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக எடை உள்ளவர்கள், 50 வயதுக்கு அதிகமானவர்கள், புகைபிடிப்பவர்கள், குடும்பத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து கொண்டால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிறுநீரக செயலிழப்பின் வேகத்தை குறைக்கவும், அதன் மூலமாக இதய பாதிப்புகளை தடுக்கவும் கீழ்கண்ட சிகிச்சை முறைகள் உதவுகின்றன. அதாவது ஆரோக்கியமாக உடலை பேண வேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறுநீரில் புரதசத்து ஒழுகுதலை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டும். கொழுப்பு சத்தின் அளவை ரத்தத்தில் குறைக்க வேண்டும். சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேற்கண்டவற்றை கவனித்து சிறுநீரக பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
Tags:    

Similar News