செய்திகள்
கோப்புபடம்

2 வீரர்களுக்கு பாதிப்பு - கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்

Published On 2021-04-04 06:08 GMT   |   Update On 2021-04-04 06:08 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஊழியர் மற்றும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

2-வது ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே மும்பை வான்கடே மைதான ஊழியர் கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு 2 வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியை சேர்ந்த அக்‌ஷர்பட்டேல், பெங்களூர் அணியை சேர்ந்த படிக்கல் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அக்‌ஷர்படேலுக்கு மும்பை வரும்போது கொரோனா இல்லை. 2-வது கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதேபோல சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வீரர்கள், மைதான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. மும்பையில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அங்கு ஐ.பி.எல். போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைதான ஊழியர்கள் பாதிக்கப்பட்டதோடு அங்கு கொரோனாவின் அச்சுறுத்தலும் இருக்கிறது.

இதனால் மும்பையில் நடைபெற வேண்டிய ஐ.பி.எல். போட்டியை வேறு இடத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது.

ஐதராபாத் அல்லது இந்தூரில் போட்டியை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் 10 ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதேநேரத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் அனைத்து நகரங்களையும் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Tags:    

Similar News