ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகருக்கு காப்புக்கட்டியபோது எடுத்த படம்.

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது

Published On 2019-12-05 05:50 GMT   |   Update On 2019-12-05 05:50 GMT
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான, பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான, பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மலைக்கோவிலில் சாயரட்சை பூஜையில் காப்புக்கட்டு நடைபெற்றது.

முன்னதாக சாயரட்சை பூஜையில் மூலவர் முருகப்பெருமானுக்கு 16 வகை அபிஷேகம், ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சன்னதியில் உள்ள விநாயகர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், துவாரபாலகர்கள் மற்றும் மயில்வாகனம், கொடிமரத்துக்கு காப்புக்கட்டு நடந்தது.

இதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. காப்பு கட்டும் நிகழ்ச்சியை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.

7 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, 6.45 மணிக்கு சின்னக்குமாரர், தங்க சப்பரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

6-ம் திருநாளான வருகிற 9-ந் தேதி நடக்கும் சாயரட்சை பூஜையில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். 7-ம் திருநாளான வருகிற 10-ந்தேதி திருக்கார்த்திகையையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு உடன் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து விளாபூஜை, சிறுகால சந்தி, கால சந்திபூஜை, உச்சிகால பூஜை, சண்முகார்ச்சனை, தீபாராதனை, சாயரட்சை பூஜைக்கு பிறகு 4.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலு வலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News