உள்ளூர் செய்திகள்
வெறிநாய் கடித்ததில் பெண்ணின் கை காயமடைந்துள்ளது.

பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2022-05-06 09:48 GMT   |   Update On 2022-05-06 09:48 GMT
பேராவூரணி அருகே பொதுமக்களை தெருநாய்கள் கடிப்பதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த மணக்காடு ஊராட்சியில், பல்வேறு கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நெல்லையடிக்காடு, வீரக்குடி, மணக்காடு, பாங்கிராங்கொல்லை, மேல மணக்காடு, கீழமணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், உரிய பராமரிப்பின்றி வீதிகளில் சுற்றித் திரிகின்றன. 

இந்த நாய்கள் தெருவில் செல்லும் பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆகியோரை விரட்டி துரத்தி கடிக்கின்றது. இதனால் பலரும் படுகாயமடைந்துள்ளனர். மேலும், தெருவில் மேயும் கோழிகளை தாக்கி கொன்று விடுகின்றது.கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்துக் குதறி விடுகின்றன. இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் நிலை உள்ளது. விவசாயிகள் பலரும் தங்களது கால்நடைகளை இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லையடிக்காடு-வீரக்குடி பகுதியில் நடந்து சென்ற, அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மனைவி நீலா (35) என்பவரை தெரு நாய்கள் துரத்திக் கடித்தன. 

இதில் வலது கையில் பலத்த காயம் அடைந்த அவர், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரது காயத்திற்கு மருந்திட்டு தையல் போடும் நிலைமை ஏற்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு நீலா அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேகர் கூறுகையில், “மணக்காடு பஞ்சாயத்தில் பல்வேறு கிராமங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. பராமரிப்பின்றி திரியும் இந்த நாய்கள் வெறிநாய்களாக மாறி உள்ளன. இவை, மற்ற நாய்களைக் கடிக்கும் போது அந்த நாய்களும் வெறிநாய்களாக மாறுகின்றன. 

வெறிநாய்க்கடி காரணமாக ரேபிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பராமரிப்பின்றி வீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

Tags:    

Similar News