செய்திகள்
கோப்பு படம்

ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 2,314 பேரின் வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-06 15:29 GMT   |   Update On 2021-06-06 15:29 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 2 ஆயிரத்து 314 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 13 ஆயிரத்து 482 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 702 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 184 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.30 லட்சத்து 47 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 2 ஆயிரத்து 314 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலை விதிகளை கடைபிடிக்க தவறியவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 34 ஆயிரத்து 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொரோனா ஊரடங்கை மீறி மது மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்றவர்கள் மீது 268 வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 ஆயிரத்து 963 லிட்டர் சாராயம், 3 ஆயிரத்து 841 மது பாட்டில்கள் மற்றும் 42 ஆயிரத்து 330 லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடித்து, முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க மொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News