செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Published On 2020-11-30 05:54 GMT   |   Update On 2020-11-30 10:43 GMT
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை:

கொரோனா ஊரடங்கால் இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது என கூறியும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாணவர்களிடம் அதிகளவு தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும், 4 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு நடத்த ரூ.37.11 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் விடைத்தாள் திருத்தும் பணியை தவிர இதர பணிகளுக்கும் செலவாகி உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை திருப்பி செலுத்தினால் நிதிச்சுமை ஏற்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், தேர்வுக் கட்டணம் வசூலித்த பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.

‘ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் திருப்பித் தர தேவையில்லை. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. கட்டணத்தை செலுத்தாதவர்கள் 4 வாரங்களில் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்’ என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News