செய்திகள்
பிரதமர் மோடி

அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளை இந்தியாவில் உருவாக்குகிறோம் - ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2020-11-22 19:04 GMT   |   Update On 2020-11-22 19:04 GMT
மெட்ரோ ரெயில், நீர்வழிப்பாதை என அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளை இந்தியாவில் உருவாக்குகிறோம் என்று ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
ரியாத்:

இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இணைந்து ‘ஜி-20’ என்ற அமைப்பாக செயல்படுகின்றன.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு சவுதி அரேபிய மன்னர் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டார்.

நேற்று, ‘கிரகத்தை பாதுகாத்தல்’ என்பது குறித்து ஒரு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு உலகளாவிய பெருந்தொற்று நோயின் விளைவுகளில் இருந்து நமது மக்களையும், பொருளாதாரங்களையும் காப்பதில் நாம் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராடுவதில் நாம் கவனத்தை செலுத்துவதும் சம அளவு முக்கியமானது. பருவநிலை மாற்றத்தை ஒருங்கிணைந்த, விரிவான, முழுமையான வழியில் நாம் போராட வேண்டும். சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழும் எங்களின் பாரம்பரிய நெறிமுறைகள் மற்றும் எனது அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட இந்தியா, குறைந்த கார்பன் மற்றும் பருவநிலை, நெகிழ்திறன் மேம்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுகிறது.

இந்தியா, பாரீஸ் ஒப்பந்த இலக்கு களை சந்திப்பது மட்டுமின்றி, அவற்றையும் தாண்டி இருக்கிறது என்பதை பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதில், பல பகுதிகளில் இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாங்கள் எல்.இ.டி. பல்புகளை பிரபலப்படுத்தி இருக்கிறோம். இது ஆண்டுக்கு 3 கோடியே 80 லட்சம் டன் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை சேமிக்கிறது. உஜ்வாலா என்னும் எங்கள் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தின்கீழ் 8 கோடி வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்கி புகையில்லா சமையலறைகளை உருவாக்கி உள்ளோம். இது உலகளவில் மிகப்பெரிய தூய்மை எரிசக்தி அமைப்பில் ஒன்றாகும்.

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எங்கள் வனப்பகுதி விரிவடைகிறது. சிங்கம், புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் 2 கோடியே 60 லட்சம் எக்டேர் பரப்பு பாழான நிலத்தை மீட்டெடுப்பதை நோக்கமாக வைத்திருக்கிறோம். நாங்கள் வட்ட பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறோம்.

மெட்ரோ ரெயில் திட்டம், நீர்வழிப்பாதைகள் மற்றும் பல அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.

2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்தியை உருவாக்கிட இலக்கு வைத்துள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்தியை உருவாக்கவும் நாங்கள் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கிறோம்.

புதிய மற்றும் நிலையான தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேலும் அதிகரிப்பதற்கு இது சிறந்த தருணம் ஆகும். ஒத்துழைப்பு, கூட்டு மனப்பான்மையுடன் நாம் அவ்வாறு செய்ய வேண்டும். வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றின் அதிக ஆதரவு இருந்தால் முழு உலகமும் வேகமாக முன்னேற முடியும்.

மனித நேயம் செழிக்கஒவ்வொரு தனி மனிதரும் வளர வேண்டும். உழைப்பை உற்பத்தியின் ஒரு அம்சமாக மட்டுமே பார்க்காமல், ஒவ்வொரு தொழிலாளியின் கண்ணியத்திலும் கவனம்செலுத்த வேண்டும். அத்தகைய அணுகுமுறை நமது கிரகத்தை பாதுகாப்பதற்கான சிறந்த உத்தரவாதமாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News