செய்திகள்
பாழடைந்த வீட்டிற்குள் இறந்து கிடந்த வாலிபர்கள்.

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

Published On 2021-11-23 08:45 GMT   |   Update On 2021-11-23 08:45 GMT
மின்வயர்களை திருடிய போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ளது மீட் தெரு. இங்கு வணிகவரித்துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள், ஏராளமான கடைகள்-நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இதன் அருகாமையில் கல்லூரி ஒன்றும் உள்ளது.

இதனால் தினமும் காலை முதல் இரவு வரை அதிகமான மக்கள் நடமாட்டத்துடன் எப்போதும் பரபரப்புடனே காணப்படும். இந்த தெருவில் பாழடைந்த வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டின் முன் பகுதியில் இன்று காலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பிணமாக கிடந்தனர்.

நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் வளாகத்தில் முன் பகுதியில் இருவரும் அருகருகே இறந்து கிடந்தார்கள். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வடசேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்திற்கு சென்றனர்.

காம்பவுண்ட் சுவரின் கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று 2 வாலிபர்களின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அவர்களது உடலில் மின் வயர்கள் கிடந்தன. மேலும் ஒருவரின் தொடைப்பகுதியில் மின்சாரம் தாக்கியதற்கான காயம் இருந்தது.

இதனால் அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் மின்சப்ளை நிறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார், 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களில் ஒருவர் கோட்டார் பாறைக்கால் மடத்தெருவை சேர்ந்த தொன்போஸ்கோ (வயது20) என்பதும், மற்றொருவர் கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்கிற ராபர்ட்(25) என்றும் தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் ஆவர்.

அவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள்? என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மின்வயர்களை திருடியபோது மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது. நண்பர்களான தென்போஸ்கோ, ராபர்ட் ஆகிய இருவர் மீதும் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.

தொன்போஸ்கோ மீது 3 வழக்குகளும், ராபர்ட் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. மது குடிக்கும் பழக்கம் உள்ள அவர்கள் சிறுசிறு திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதே போல் நேற்று இரவு மீட் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

மின் இணைப்பு இல்லாமல் இருண்டுகிடந்த அந்த வீட்டில் மின்வயர்களை திருடுவதற்கு இருவரும் திட்டமிட்டுள்ளனர். அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரில் உள்ள இரும்பு கேட்டுகள் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டிருந்ததால், அந்த வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்திருக்கின்றனர்.

பின்பு அந்த வீட்டுக்குள் சென்று அங்கிருந்த மின் வயர்களை இருட்டுக்குள் நின்றபடி வெட்டி திருடியிருக்கின்றனர். திருடிய மின்வயர்களை சுருட்டிய படி வீட்டிற்கு வெளியே வந்திருக்கின்றனர். அந்த வீட்டின் வளாகத்தில் இருந்த “ஸ்டே” கம்பியையும் அறுத்து எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

அப்போது “ஸ்டே” கம்பி மின் கம்பத்தில் உள்ள மின் வயரில் பட்டிருக்கிறது. இதனால் “ஸ்டே” கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருவரையும் தாக்கியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக இறந்திருக்கின்றனர்.

இரவு நேரம் என்பதாலும், சம்பவம் நடந்த வீடு இருண்டு கிடந்ததாலும் இந்த சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை. இன்று காலையே அந்த வழியாக சென்றவர்கள், வாலிபர்கள் இருவரும் பிணமாக கிடப்பதை பார்த்திருக்கின்றனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 2 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாழடைந்த வீட்டுக்குள் 2 வாலிபர்கள் இறந்துகிடந்த சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது.

இதனால் அந்த வழியாக வேலைக்கு சென்ற தனியார் நிறுவனம் மற்றும் கடை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு விட்டனர். அவர்கள் பிணமாக கிடந்த 2 வாலிபர்களின் பிணத்தையும் பார்த்தபடி சென்றனர். ஏராளமானோர் திரண்டுவிட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மின்வயர்களை திருடிய போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News