தமிழ்நாடு
ஒமைக்ரான் வைரஸ்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்று சிகிச்சைக்கு 100 படுக்கைகளுடன் தனிவார்டு

Published On 2021-12-03 06:08 GMT   |   Update On 2021-12-03 06:08 GMT
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது வீரியமிக்க ஒமைக்ரான் தொற்றா என்று பரிசோதனை நடத்தப்படுகிறது.
நெல்லை:

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று நோய் வீரியமாக பரவிய காலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் தனிவார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசின் தீவிர முயற்சியால் தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது.

ஊரடங்கு விதிமுறைகளும் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 180 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு உள்ளது. இங்கு இப்போது 16 கொரோனா நோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் 8 பேர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக அங்கு தனியாக தங்கி உள்ளார்கள். நெல்லை மாவட்டத்தில் நேற்று 500-க்கும் மேற்பட்டோருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் புதிதாக 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நெல்லை மாநகராட்சி பகுதியில் 2 பேருக்கும், சேரன்மகாதேவி பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருவாரியான தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் உருமாறி, புதிய வடிவில் ஒமைக்ரான் தொற்றாக பல நாடுகளில் பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த புதிய வகை ஒமைக்ரான் தொற்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்றுடன் கூடிய ஒரு நோயாளி கண்டறியப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது வீரியமிக்க ஒமைக்ரான் தொற்றா என்று பரிசோதனை நடத்தப்படுகிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இதுபோல் 2-வது முறை கொரோனா தொற்று பாதிப்பு ஏறபட்டால் அவருடைய ரத்தம், மரபணு பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் விழிப்புடன் இருக்க அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து முக்கிய ஆஸ்பத்திரிகளில் ஒமைக்ரான் தொற்றுடன் ஏதேனும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு ஏற்படுத்தி தயராக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 180 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு உள்ள கட்டிடத்தில், 100 படுக்கைகள் கொண்ட பகுதியை தனியாக பிரித்து ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைத்துள்ளார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் செய்துள்ளார்.

Tags:    

Similar News