லைஃப்ஸ்டைல்
கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்

கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்

Published On 2021-06-09 06:37 GMT   |   Update On 2021-06-09 06:37 GMT
கொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் திருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் கோர தாண்டவத்தை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாம் உணர்ந்தும் அறிந்தும் கொண்டிருக்கிறோம். கொரோனா உலகத்திலும், நம் குடும்ப உறவுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் ஏற்படும் பாதிப்பை அறியும் போது நமக்குள் அச்சம் எழுகின்றது. உயிரிழப்புகளும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.

கொரோனா ஊரடங்கின் தொடக்க காலம்

ஊரடங்கு என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டது இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் தான். இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் 25 அன்று முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதன்முதலில் மக்கள் நோயின் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறாமல் பாதுகாப்புடன் வீடுகளில் இருந்தனர். அந்த நாட்களில் பள்ளிக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள், மதவழிபாட்டு தலங்கள், போக்குவரத்து என அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தம் சொந்தங்களோடு, குடும்பங்களோடும் அன்பை பரிமாறி தம் குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு விளையாடி பொழுதை கழித்தனர். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களோடு நெருங்கி பழகவும் அவர்களை பற்றி பெற்றோர்கள் நன்கு புரிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருந்தது. கொரோனா பரவலும் கட்டுக்குள் இருந்தது.

கொரோனா ஊரடங்கால் களையிழந்த குடும்ப உறவுகள்

கொரோனா ஊரடங்கு சில மாதங்கள் கழித்து இன்பமான சூழ்நிலைகள் அனைத்தும் தலைகீழாக மாறியது. பெற்றோர்களுடன் நேரத்தை செலவழித்த குழந்தைகள் கைப்பேசிக்கு அடிமையாக மாறினார்கள். பப்ஜி, பிரீபையர் போன்ற விளையாட்டுகளில் இரவும், பகலும் மூழ்கி பல மாணவர்கள் தங்கள் உயிரையே இழந்தார்கள். வேலைகள் இல்லாமலும், பணம் இல்லாமலும் ஒவ்வொரு மனிதனும் படும்பாடு சொல்ல முடியாது. இதனால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மக்கள் எண்ணிலடங்கா துன்பங்களுக்கு உள்ளாகினர். சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டபோது மக்கள் தங்களின் தேவைகளுக்காக தனிமனித இடைவெளியின்றி அனைத்து இடங்களுக்கும் செல்ல தொடங்கினர். இதனால் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து கொண்டே சென்றது.

பெருந்தொற்றிலிருந்து மீள பாதுகாப்பு வழிமுறைகள்

கொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் திருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்றிலிருந்து நம்மை நாமே காத்து கொள்ள அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நமது நலனை காத்து இவ்வுலகம் நலமுடன் வாழ வழிவகை செய்வோம். முககவசம் அணிவோம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்போம் மற்றும் முகம், கை சுத்தம் பராமரிப்போம். இவற்றை நாம் கடைபிடித்தால் கொரோனா பெருந்தொற்றிற்கு ஆளாகாமல் நலமோடு வாழலாம். இத்தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்கள் மன உறுதியுடனும், அச்ச உணர்வு இன்றியும் இருந்தால் இத்தொற்றிலிருந்து எளிதில் குணமடைய முடியும். கொரோனா தடுப்பூசிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணையையும் தவறாமல் போட்டு கொள்ள வேண்டும்.

பாதுகாத்து கொள்ளும்...

நாம் ஒவ்வொருவரும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளையும் அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளையும் அறிந்து செயல்பட வேண்டும். நாம் நலமாக இருந்தால் நம்முடைய குடும்பமும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களும் நலமோடு இருப்பர். கொரோனா பெருந்தொற்றிலிருந்து இவ்வுலகம் மீண்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்திருக்கும் காலம் விரைவில் வரும்.

ரா.ரீஜா,

முதலாமாண்டு கணிதவியல் துறை,

கிரேஸ் கல்வியியல் கல்லூரி, படந்தாலுமூடு.
Tags:    

Similar News