செய்திகள்
தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலையில் வி‌ஷ வாயு தாக்கி தொழிலாளி பலி

Published On 2019-08-13 07:07 GMT   |   Update On 2019-08-13 07:07 GMT
ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வி‌ஷ வாயு தாக்கி தொழிலாளி இறந்தார். மேலும் மயக்கமடைந்த 4 பேர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை சிப்காட்டில் தனியார் கெமிக்கல் கம்பெனி இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்தர் (வயது 27), பூட்டுதாக்கு ராஜா (38), ராணிப்பேட்டை சுகேந்தர் (29), சத்திரம்புதூர் உதயகுமார் (48), வாணாபாடி மாரிமுத்து ஆகிய 5 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பைப்பில் இருந்து திடீரென வி‌ஷ வாயு வெளியானது. அதை சுவாசித்த சுகேந்தர் மயங்கி விழுந்தார். இதனை கண்ட மற்ற 4 பேரும் அவரை மீட்க முயன்றனர். அப்போது அவர்களும் வி‌ஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த காவலாளி அனைவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் அனைவரையும் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்தர் பரிதாபமாக இறந்தார். மயக்கமடைந்த மற்ற தொழிலாளிகள் ராஜா, ராணிப்பேட்டை சுகேந்தர், உதயகுமார், மாரிமுத்து ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News