செய்திகள்
அங்கொடா லொக்கா

இலங்கை தாதா அங்கொட லொக்கா மாரடைப்பால்தான் மரணம்- ஐ.ஜி. சங்கர் தகவல்

Published On 2020-09-17 05:30 GMT   |   Update On 2020-09-17 05:30 GMT
கோவையில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா மாரடைப்பால்தான் மரணம் அடைந்ததாக உடற்கூறு அறிக்கை மூலம் தெரியவந்து இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் கூறினார்.
கோவை:

இலங்கையை சேர்ந்த பிரபல தாதா அங்கொட லொக்கா (வயது 35). இவர் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இலங்கையில் இருந்து தப்பி வந்த அவர், சென்னையில் பதுங்கி இருந்தார். பின்னர் கோவையில் போலி பெயரில் வீடு பிடித்து தங்கி இருந்தார். இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக அங்கொட லொக்காவுடன் தங்கி இருந்த காதலி தான்சி கூறினார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மதுரையில் அவரது உடல் எரிக்கப்பட்டது. அவர் கோவையில் தங்கி இருப்பதற்காக போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க உதவியதாக பெண் வக்கீல் சிவகாமிசுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் காதலி தான்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் அங்கொட லொக்காவின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தபோது, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடற்கூறுகள், சென்னையில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் உடற்கூறு அறிக்கை வந்து இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் கூறினார். மேலும் அவர் கூறும்போது, இந்த அறிக்கையில் அங்கொட லொக்கா மாரடைப்பால் இறந்து இருப்பதாகவும், சந்தேக மரணம் இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இறந்தவர் அங்கொட லொக்காதானா என்று டி.என்.ஏ. பரிசோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News