செய்திகள்

பாகிஸ்தானில் 16 மத்திய மந்திரிகள் பதவியேற்பு - பிரதமருக்கான 5 ஆலோசகர்களும் பதவி ஏற்றனர்

Published On 2018-08-20 07:46 GMT   |   Update On 2018-08-20 07:46 GMT
பாகிஸ்தானில் இம்ரான் கான் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள 16 மந்திரிகள் மற்றும் பிரதமருக்கான 5 ஆலோசகர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். #PakistanCabinet #ImranKhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. எனவே, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர் 21 பேர் அடங்கிய தனது மந்திரிசபையை இம்ரான் கான் அறிவித்தார். இதில் 16 பேர் மத்திய மந்திரிகள்; 5 பேர் பிரதமரின் ஆலோசகர்கள்,  பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரியாக பர்வேஸ் கட்டாக், நிதி மந்திரியாக ஆசாத் உமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக ஷா மெஹ்முது குரேஷி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.



இந்நிலையில் இம்ரான் கான் தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இம்ரான் கான் முன்னிலையில் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி மம்னூன் உசைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது பதவியேற்றுள்ள மந்திரிகளில் பெரும்பாலானவர்கள் முஷாரப் ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிமந்திரி உமர், நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை உடனே சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் கூறினார். நாட்டில் அமைதியை ஏற்படுத்த இரவு பகலாக பாடுபடப்போவதாக பாதுகாப்புத்துறை மந்திரி கட்டாக் தெரிவித்தார். #PakistanCabinet #ImranKhan

Tags:    

Similar News