செய்திகள்

முதல் டி20 போட்டி- இந்தியாவிற்கு 110 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2018-11-04 15:10 GMT   |   Update On 2018-11-04 15:10 GMT
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 110 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தெர்வு செய்தார். இந்திய அணியில் குருணால் பாண்டியா, கலீல் அஹமது ஆகியோர் அறிமுகமானார்கள். புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 5. மணிஷ் பாண்டே, 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. குல்தீப் யாதவ், 9. உமேஷ் யாதவ் 10. பும்ரா, 11. கலீல் அஹமது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷாய் ஹோப், 2. ராம்தின், 3. ஹெட்மையர், 4. பொல்லார்டு, 5. டேரன் பிராவோ, 6.  ரோப்மேன் பெவோல், 7. பிராத்வைட், 8. ஆலன், 9. கீமோ பால், 10. பியர், 11. தாமஸ்.

ஷாய் ஹோப், ராம்தின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் முதல் இரண்டு ஓவரில் தலா 8 ரன்கள் அடித்தது. இதனால் அதிக ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் ராம்தின் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் ஹெட்மையர் களம் இறங்கினார். அணியின் ஸ்கோர் 22 ரன்னாக இருக்கும்போது ஷாய் ஹோப் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். 28 ரன்கள் இருக்கும்போது ஹெட்மையர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.



அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் தவழ ஆரம்பித்தது. பொல்லார்டு 14 ரன்னிலும், டேரன் பிராவோ 5 ரன்னிலும், ரோவ்மேன் பொவேல் 4 ரன்னிலும், பிராத்வைட் 4 ரன்னிலும் வேளியேறினார்கள். குருணால் பாண்டியா அறிமுக போட்டியில் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பொல்லார்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 4 ஒவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

8-வது வீரரா களம் இறங்கிய ஆலன் 20 பந்தில் 27 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 110 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
Tags:    

Similar News