ஆன்மிகம்
சக்கரபாணி கோவில், ராஜகோபால சாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

கும்பகோணத்தில் 3 வைணவ கோவில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-02-19 08:57 GMT   |   Update On 2021-02-19 08:57 GMT
கும்பகோணத்தில் 3 வைணவ கோவில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள 5 பிரசித்திப்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக சக்கரபாணி சாமி கோவில் திகழ்கிறது. சிறப்புமிக்க இந்த கோவிலில் மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி கொடிமரம் அருகே சக்கரபாணி பெருமாள், சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார்களுடன் எழுந்தருளினார். அப்போது கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழாவில் வருகிற 25-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 26-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மாசிமக தேரோட்டம் நடக்கிறது.

அன்று மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடக்கிறது. இதேபோல் கும்பகோணம் ராஜகோபாலசாமி கோவில், ஆதிவராக பெருமாள் ஆகிய வைணவ தலங்களிலும் நேற்று மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜகோபாலசாமி கோவிலில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில் ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசாமி கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார். ஆதிவராக பெருமாள் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பெருமாள், அம்புஜவல்லி தாயாரோடு எழுந்தருளினார். விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News