ஆன்மிகம்
மலை, வயல்வெளி என இயற்கை எழிலுக்கு நடுவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தேரோட்டம் நடந்தது.

குன்றத்து கிரிவலப்பாதையில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2021-04-02 03:54 GMT   |   Update On 2021-04-02 03:54 GMT
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழாவில் கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து தரிசனம் செய்தனர்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் 15 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 18-ந் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 28-ந் தேதி பங்குனி உத்திரமும், 29-ந்தேதி சூரசம்கார லீலையும், 30-ந்தேதி பட்டாபிஷேகமும் நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் முருகப்பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் கோலகலமாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் முருகப்பெருமான்-தெய்வானை எழுந்தருளினர். முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் தேரில் நின்று வெள்ளை (பராம்பரிய துண்டு) வீசினார். உடனே அங்கு திரளாக கூடி இருந்த பக்தர்கள் குன்றத்து குமரனுக்கு அரோகரா, சுப்பிரமணியசாமிக்கு அரோகரா என்று விண்ணைத்தொடும் அளவிற்கு பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரைதொட்டு வணங்கி வடம்பிடித்து இழுத்தனர்.

தேரானது நிலையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டது. இதேவேளையில் விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத் தேர் முன்னே வலம் சென்றது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி அசைந்தபடி பெரிய தேர் வலம் வந்தது. சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை மகா தேர் சுற்றி வந்து 10.45 மணிக்கு நிலைக்கு வந்தது. தேர்நிலைக்கு வந்ததும் வாழைப்பழங்களை டஜன், டஜனாக சூறை விட்டு தங்களது நேர்த்தியை செலுத்தினார்கள். தேரோட்டத்தில் சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து இருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் காவடிகள், பால்குடங்கள் எடுத்து வந்து நேர்த்தியை செலுத்தி னார்கள். திருவிழாவின் நிறைவுநாளான இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News