செய்திகள்
கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை- கலெக்டர் பேச்சு

Published On 2021-07-01 10:48 GMT   |   Update On 2021-07-01 10:48 GMT
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தற்போது தொற்றுப் பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு குறித்து மருத்துவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம்) கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தற்போது தொற்றுப் பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா தாக்குதல் உள்ளானவர்களில், கட்டுபடுத்தாத சர்க்கரை நோய் மற்றும் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களும், கருப்பு பூஞ்சை நோய் எளிதாக தாக்கும். மேலும், காசநோய் தாக்கம் உள்ளவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை மருத்துவரின் ஆலோசனையுடன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும்.

கொரோனா தொற்று உள்ள பொழுதோ அல்லது கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு, மூக்கடைப்பு, மூக்கில் இருந்து ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வேதனை, முகத்தில் மரமரப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணை சுற்றி வீக்கம் மற்றும் கண் வலி, தலைவலி, பல் வலி மற்றும் பற்கள் ஆடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அனுகவேண்டும்.

கருப்பு பூஞ்சை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் இந்த நோயை எளிதாக குணப்படுத்தி விடலாம். தாமதித்தால் கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு கூட ஏற்படலாம். இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை மட்டுமின்றி ஆம்பொடரிசின் பி எனப்படும் பூஞ்சைகொல்லி மருந்து கொடுக்கவேண்டும். இம்மருந்து கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில், தேவையான அளவில் இருப்பில் உள்ளது. பொதுமக்கள் யாரும் கருப்பு பூஞ்சை நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை, ஆனால் கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும்.

Tags:    

Similar News