செய்திகள்
சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன்

சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத் திருத்த மசோதா- மாநிலங்களவையில் விவாதம்

Published On 2020-09-19 08:05 GMT   |   Update On 2020-09-19 08:05 GMT
கொரோனா களப்பணியின்போது பல சுகாதாரப் பணியாளர்கள் அவமதிக்கப்பட்டதால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தொற்றுநோய்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 6ம் நாளான இன்று, மாநிலங்களவையில் தொற்றுநோய்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ்வரதன் தாக்கல் செய்தார். 

அப்போது அவர் பேசுகையில், ‘கொரோனாவுடன் தொடர்புடைய சூழ்நிலை காரணமாக பல சுகாதாரப் பணியாளர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை குறித்து ஆராய்ந்த மத்திய அரசு, இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக ஒரு சட்டம் தேவை என்பதை கண்டறிந்து, சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது’ என்றார்.

மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசம்போது, ‘நீங்கள் இப்போது தான் சுகாதார ஊழியர்களைப் பற்றி நினைத்தீர்களா? மேற்கு வங்காளத்தில் இதற்காக ஒரு சட்டம் உள்ளது. மத்திய அரசின் சட்டத்தால் என்ன நடக்கும்? இந்த மசோதா மாநிலங்களின் அரசியலமைப்பு ரீதியாக ஒதுக்கப்பட்ட செயல்பாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சியாகும்’ என்றார்.

இந்த சட்ட மசோதாவை ஆதரித்து பேசிய பாஜக உறுப்பினர் சரோஜ் பாண்டே, சுகாதாரத்துறையினர் மீதான தாக்குதலை தடுக்க இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். ‘நாங்கள் அவர்கள் மீது பூக்களை தூவி வரவேற்றோம். சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை தொற்றுநோயில் இருந்து பாதுகாக்க விரும்பியதால், அவர்களை பல மாதங்களாக சந்திக்காமல் உள்ளனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்திருத்தம், ஆபத்தான தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க உதவுவதுடன், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதுபோன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மத்திய அரசின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. சுகாதாரப் பணியாளர்களை அவமதித்தாலோ தாக்கினாலோ, 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.
Tags:    

Similar News