செய்திகள்
சுகாதாரத்துறையினர் 2 வது நாளாக வீடு, வீடாக சென்று நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை பகுதியில் சுகாதாரத்துறையினர் 2-வது நாளாக தடுப்பு பணி முகாம்

Published On 2019-11-05 12:07 GMT   |   Update On 2019-11-05 12:07 GMT
அம்மை நோய் தாக்கி தந்தை-மகன் பலியானதால் முத்துப்பேட்டை பகுதியில் சுகாதாரத்துறையினர் 2-வது நாளாக தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கற்பகநாதர்குளம் தெற்கு பண்ணைசேத்தி பகுதியை சேர்ந்தவர் வாளமுத்து(85), இவரது மகன் அன்புராஜன் (50), ஆகியோர் அம்மை நோய் தாக்கி அடுத்தடுத்து இறந்தனர்.

இதனைதொடர்ந்து வாளமுத்துவின் பேரன் கல்லூரி மாணவன் பேரழகனுக்கும்(20) அம்மை நோய் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அருகில் உள்ளவர்களுக்கும் அம்மை நோய் பரவியுள்ளது. இதனால் கிராம முழுவதும் மக்கள் மத்தியில் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கற்பகநாதர்குளம் பகுதியில் முகாமிட்டனர். அப்பகுதியில் வீடு-வீடாக சென்று நோய் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து மருந்து-மாத்திரைகளை வழங்கினர்.

இந்த நிலையில் அரசு நடமாடும் மருத்துவமனை மருத்துவர் தாமரைச்செல்வன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் நேற்று 2-வது நாளாக அப்பகுதியில் வீடு-வீடாக சென்று வேறு யாருக்காவது அம்மை இருக்கிறதா? அம்மை அறிகுறிகள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

அதேபோல் முத்துப்பேட்டை வட்டார சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் செவிலியர்கள் ஜெயலட்சுமி, லதா மற்றும் பணியாளர்கள் வீதி வீதியாக சென்று தேவையற்ற பொருட்களை அகற்றியும், பிளிச்சிங் பவுடர் தெளித்தும் நோய் தடுப்பு பணிகளை மேற்க்கொண்டனர். இந்த நிலையில் அம்மை நோய் பாதிப்பு குறைந்துள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News