செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் - உள்படம்: உடைக்கப்பட்ட உண்டியல்

புதுக்கோட்டையில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2020-10-01 10:57 GMT   |   Update On 2020-10-01 10:57 GMT
புதுக்கோட்டையில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில், செட்டிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவிலின் பூசாரி கணேசன் தினமும் அதிகாலை 5.30 மணி அளவில் நடையை திறப்பதும், இரவில் 9.30 மணி அளவில் பூட்டி விட்டு செல்வதும் வழக்கம்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பூசாரி கணேசன், கோவிலை திறக்க வந்தார். அப்போது பிரதான நுழைவுவாயிலை திறந்து உள்ளே சென்றபோது, உண்டியலில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். உண்டியலில் அருகே சில்லரை நாணயங்கள் சிதறி கிடந்தன. உண்டியலில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலின் பக்கவாட்டில் உள்ள கதவின் பூட்டை உடைத்து மர்மநபர் உள்ளே வந்து, உண்டியலின் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரிந்தது. கடந்த 2014-ம் ஆண்டு உண்டியல் திறக்கப்பட்டது. அதன்பின் கும்பாபிஷேக பணிக்காக திறந்து கொள்ளலாம் என ஊர்க்காரர்கள் முடிவு செய்து உண்டியலை திறக்கவில்லை. ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் பண்டிகை, விசேஷ காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வழிபாடு நடத்துவார்கள். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை உண்டியலில் செலுத்துவது வழக்கம்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படாத நிலையில் அதில் தற்போது ரூ.1 லட்சம் வரையும், சில தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்திருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

உண்டியலில் சில்லரை நாணயங்கள் மட்டும் திருட்டு போகாமல் அப்படியே இருந்தன. இந்த திருட்டு சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News