செய்திகள்
கோப்பு படம்

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கூட்டம் கூட தடை

Published On 2020-10-01 20:43 GMT   |   Update On 2020-10-01 20:43 GMT
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண் கடந்த மாதம் 14-ந் தேதி வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த உயர்வகுப்பை இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அந்த பெண் தனக்கு நடந்த கொடூரத்தை வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கினர். இதில் அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அந்த கும்பலின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண், ரத்த வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த அந்த இளம்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையுடம் பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி சந்திக்க நேற்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். அவரை வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதற்கிடையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது. குறிப்பாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதான பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பேரழிவு மேலாண்மை அதிகாரத்தின் படி கடந்த செப்டம்பர் 3 முதல் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானம் பகுதியில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 100 பேர் கூட்டமாக கூட வேண்டுமானாலும் உரிய முன் அனுமதி என டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியா கேட் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கூடமாக கூடக்கூடாது என டெல்லி போலீஸ் தரப்பில் தெர்விக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின்போது ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News