செய்திகள்
கொரோனா தேவி கோவில்

கட்டிய 5-வது நாளில் கொரோனா தேவி கோவில் இடிப்பு -காரணம் இதுதான்

Published On 2021-06-13 11:09 GMT   |   Update On 2021-06-13 11:09 GMT
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும், தொற்றின் வேகம் குறையவும் வேண்டி பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி வழிபடத் தொடங்கி உள்ளனர்.
லக்னோ:

கொரோனா பெருந்தொற்று மனித சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால், வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்படி அவரவர் தங்கள் இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர். அதேபோன்று, பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி வழிபடத் தொடங்கி உள்ளனர். 

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவி கோவில் கட்டினர். வேப்ப மரத்தடியில் கொரோனா தேவிக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்தத் தொடங்கினர். கடந்த 7ம் தேதி கோவில் திறக்கப்பட்டது. 



ஆனால், திறக்கப்பட்ட 5வது நாளில் அதாவது 11ம் தேதி இரவில் கோவில் இடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலை போலீசார் இடித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை போலீசார் மறுத்தனர். பிரச்சனைக்குரிய நிலத்தில், கோவில் கட்டியதால் எதிர்தரப்பினர் கோவிலை இடித்ததாக தெரிவித்தனர்.

இந்த கொரோனா தேவி கோவிலை நொய்டாவைச் சேர்ந்த லோகேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா என்பவர் உள்ளூர் மக்களிடம் நன்கொடை பெற்று கட்டி  உள்ளார். கிராமத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் வர்மா என்பவரை பூசாரியாக நியமித்துள்ளார். அதன்பின்னர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

கோவில் இருந்த இடத்தை லோகேஷ், நாகேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா, ஜெய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் சேர்ந்து வாங்கியிருந்தனர். அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் லோகேஷ் தனது சொந்த முயற்சியில் கோவில் கட்டியதும் நாகேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. 
Tags:    

Similar News