செய்திகள்
மீட்பு பணி

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை- பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

Published On 2021-10-17 14:11 GMT   |   Update On 2021-10-17 14:11 GMT
கேரளாவில் மழை தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இடைவிடாமல் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்குடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.  சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்கப்படும் மக்களுக்காக 105 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை நிலவரப்படி, கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் 14 பேரும், இடுக்கியில் 8 பேரும் பலியாகி உள்ளனர். கோழிக்கோட்டில் ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய பலர் காணாமல் போயிருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  



இதற்கிடையே, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா  கூறி உள்ளார்.  

கேரள முதல்வர் பினராயி விஜயனை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இத்தகவலை மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர், அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். மழை தொடர்பான விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News