வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி கோவில்

மகாசிவராத்திரி விழா: காளஹஸ்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Published On 2022-03-01 07:43 GMT   |   Update On 2022-03-01 07:43 GMT
இன்று காலை காளஹஸ்தீஸ்வரர் இந்திர வாகனத்திலும், ஞான பிரசன்னாம்பிகை சப்பரத்திலும் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐம்பூதங்களில் வாயு ஸ்தலமாக விளங்கும் காளஹஸ்தி கோவிலில் சிவன் சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

மகாசிவராத்திரி விழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் இரவு நேரங்களில் வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

சிவராத்திரி விழாவின் 5-வது நாளான நேற்று அரசு சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. ஆந்திர மாநில அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி பட்டு வஸ்திரங்கள் உட்பட சீர்வரிசை பொருட்களை கோவிலுக்கு வழங்கினார்.

இதையடுத்து காளஹஸ்தீஸ்வரர் அன்ன வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை கிளி வாகனத்திலும், விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத முருகர், சண்டிகேஸ்வரர், கண்ணப்பர் ஆகியோர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டனர்.

இதையடுத்து இன்று காலை மகாசிவராத்திரியையொட்டி சாமிக்கு 8 கால அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை காளஹஸ்தீஸ்வரர் இந்திர வாகனத்திலும், ஞான பிரசன்னாம்பிகை சப்பரத்திலும் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கப்படுகிறது.

மேலும் ரெயில் மூலமாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் விரைவு தரிசனத்திலும் தரிசனம் செய்து வருகின்றனர்.

இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News