செய்திகள்
பாஜக

தமிழ்நாட்டில் 100 நாட்களில் 10 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க பா.ஜனதா ஏற்பாடு

Published On 2021-01-11 06:58 GMT   |   Update On 2021-01-11 06:58 GMT
தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10 லட்சம் வரை பா.ஜனதா உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சென்னை:

தமிழக பா.ஜனதா கட்சி சட்டசபை தேர்தலுக்கு முன்பு தனது பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தமிழ்நாட்டில் 3.66 சதவீத வாக்குகளை பெற்றது. வருகிற சட்டசபை தேர்தலில் கட்சியின் பலத்தை பலமடங்கு அதிகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் திட்டமிட்டுள்ளார். இதற்கான பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் வேல் யாத்திரை நடத்தப்பட்டது. இதன் மூலம் மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முடிந்ததாகவும், மக்கள் நல்ஆதரவு அளித்ததாகவும் எல்.முருகன் கூறினார்.

தற்போது, ‘நம்ம ஊர் பொங்கல்’ என்ற பெயரில் பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இந்த விழா நடந்தது. நேற்று சென்னை மயிலாப்பூரில் ‘நம்ம ஊர் பொங்கல்’ விழா கொண்டாடப்பட்டது.

அடுத்த கட்டமாக கட்சியை பலப்படுத்தும் விதமாக 100 நாட்களில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் வரை பா.ஜனதா உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வருகிற 14-ந் தேதி முதல் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு முன்பு முழு அளவில் களம் இறங்கி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

வருகிற 18-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 25 பேர் வீதம் நியமிக்கப்பட்டு மக்களிடம் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. பலர் பா.ஜனதாவில் சேர ஆர்வமாக உள்ளனர். எனவே 100 நாட்களில் தமிழ்நாட்டில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.

தமிழக பா.ஜனதா சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கும் இந்த தகவல்களை பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News