செய்திகள்
பணம் மோசடி

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த போலி சாமியார்

Published On 2020-10-22 03:38 GMT   |   Update On 2020-10-22 03:38 GMT
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரன்(வயது 45). இவர், சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டிவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி பகுதியில் ஒரு சாமியாரிடம் ராஜகுமாரன் குறி கேட்டார்.

அப்போது அவர், “உனக்கு ஆகாத சிலர் உன் வீட்டில் பில்லி சூனியம் வைத்து உள்ளனர். இதனால் உனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வருவதுடன், உன் வீட்டில் உள்ள அனைவருக்கும் அடிக்கடி உடல்நலம் சரியில்லாத நிலை ஏற்பட்டு வருவதாக” குறி சொன்னார்.

அது உண்மைதான் என்று ராஜகுமாரன் கூறியதும், பில்லி சூனியத்தை எடுத்து, அதை சரிசெய்ய ரூ.2 லட்சம் செலவாகும். உடனே அதனை செய்யாவிட்டால் உயிர் பலி ஏற்படும் என பயமுறுத்தினார்.

சாமியார் கூறுவது உண்மை என நம்பிய ராஜகுமாரன், உயிர் பலி ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயத்தில், தான் சொந்தமாக வைத்து ஓட்டிவந்த மினிவேனை ரூ.5 லட்சத்துக்கு விற்றார். பின்னர் சாமியார் கூறியதுபோல் ரூ.2 லட்சம் மற்றும் 2 கோழிகளுடன், தனது உறவினர் ஒருவரையுடன் துணைக்கு அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார்.

பின்னர் சாமியாரை தொடர்பு கொண்டபோது அவர், வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகே வரும்படி கூறினார். அதன்படி அங்கு சென்றனர்.

அங்கு வந்த சாமியார், இவர்களிடம் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 2 கோழிகளை வாங்கிக்கொண்டு, “இங்கேயே நில்லுங்கள். நான் பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் இருந்து வாங்கி வருகிறேன்” என கூறிச்சென்றார்.

ஆனால் அதன்பிறகு திரும்பி வரவில்லை. ஒருநாள் முழுவதும் காத்திருந்தும் பயன் இல்லை. பின்னர்தான் அவர் போலி சாமியார் என்பதும், தங்களிடம் ரூ.2 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்ததும் அவர்களுக்கு தெரிந்தது.

சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டிவந்த டிரைவர், சாமியார் சொன்னதை நம்பி மினிவேனை விற்றதுடன், அதில் கிடைத்த ரூ.2 லட்சத்தையும் தென்காசியில் இருந்து சென்னைக்கு போலி சாமியாரை தேடிவந்து கொடுத்து ஏமாந்துபோனார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியாரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News