செய்திகள்
கமல்ஹாசன்

நான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்

Published On 2021-02-27 07:29 GMT   |   Update On 2021-02-27 07:29 GMT
2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்று நம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு அது இல்லை என்பது அறிவிப்பின் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது.

இன்னும் 36 நாட்களே இருக்கிறது. நாங்கள் நல்ல வேலை ஆயத்தமாக இருந்ததினால் அடுத்தகட்ட வேலையில் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம்.

இங்கு எங்கள் கட்சியில் சேரும் 2 பேரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டி இருக்கிறது.

மூத்த அரசியலாளர் பழ.கருப்பையா, மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறார். அவர் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெற்றி வேட்பாளராக போட்டியிடவும் சம்மதித்து இருக்கிறார்.

மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் இந்த முறை மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

செந்தில் ஆறுமுகம் கிராம பஞ்சாயத்து நிகழ்சசிகளில் எங்களுக்கு பக்கபலமாக இருந்து எங்களுடன் ஏற்கனவே வேலை செய்து கொண்டு இருப்பவர்.

அவர் வருவார் என்பது அவருடைய முதல் நாள் சந்திப்பிலேயே எங்களுக்கு தெரிந்துவிட்டது. நல்லவர்கள் கூடாரத்துக்கு பழ.கருப்பையாவையும், செந்தில் ஆறுமுகத்தையும் வரவேற்கிறேன்.

2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன.

தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க என்னுடைய தலைமையிலான ‘வேட்பாளர் தேர்வுக்குழு’ வரும் மார்ச் 1-ந் தேதி முதல் வேட்பாளர் நேர்காணலில் ஈடுபடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர் தேர்வுக் குழுவினை அறிவிக்கிறேன்.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:- பழ கருப்பையா, பொன்ராஜ் (அப்துல் கலாமின் ஆலோசகர்), ஆர்.ரங்கராஜன் (ஐ.ஏ.எஸ் ஓய்வு), செந்தில் ஆறுமுகம் (சட்டப் பஞ்சாயத்து இயக்கம், சுரேஷ் ஐயர் (பிரசார வியூக அலுவலகம்).

மக்கள் நீதி மய்யம் கட்சியில் மார்ச் 1-ந் தேதி முதல் வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெறும். முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ந் தேதி வெளியிடப்படும்.

மார்ச் 3-ந் தேதி முதல் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். இப்போது வரை நான்தான் முதல்வர் வேட்பாளர். கருணாநிதி குறித்து நான் பேசியதாக கூறுவதை அவர் இருந்திருந்தால் புரிந்து கொண்டு இருப்பார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News