செய்திகள்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்யபிரத சாகு

Published On 2020-12-15 20:28 GMT   |   Update On 2020-12-15 20:28 GMT
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான சுருக்க திருத்த பணிகள் நேற்று நிறைவடைந்தன. இதுவரை பெயர் சேர்ப்பதற்கோ, திருத்துவதற்கோ, இடம் மாறியதற்காகவோ விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் ஏற்கப்படும் பட்சத்தில் வரும் ஜனவரி 20–ம் தேதி வெளியிடப்படும் 2021–ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும்.

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நிறைவடைந்தாலும், புதிதாக பெயர் சேர்க்கவோ, திருத்தவோ, முகவரி மாற்றிக்கொள்ளவோ விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த விண்ணப்பங்கள் ஜனவரிக்கு பிறகு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, துணை பட்டியலில் சேர்க்கப்படும்.

அந்த வகையில் கடந்த நவம்பர் 16–ம் தேதி தொடங்கி டிசம்பர் 14–ம் தேதி வரை பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு இடம் பெயர்தல் (படிவம் 6) ஆகியவற்றுக்கு 20 லட்சத்து 62 ஆயிரத்து 424 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 3 லட்சத்து 27 ஆயிரத்து 991 பேரும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 253 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.

காலியாகவுள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேதி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையை சமூக இடைவெளி அடிப்படையில் குறைப்பது தொடர்பாகவும், கூடுதல் வாக்குசாவடி மையம் அமைப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
Tags:    

Similar News