செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு - ரூ.4 லட்சம் அபராதம் வசூல்

Published On 2019-06-22 11:44 GMT   |   Update On 2019-06-22 11:44 GMT
ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 4000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை ரவுண்டான வரையிலும், அரசு மருத்துவமனையில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் வரையிலும், அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து ஸ்வஸ்திக் கார்னர் வரை கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

அதன்படி இந்தப்பகுதியில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையை தீவிரம் படுத்திவந்தனர். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வாகனத்தை திருப்பி அனுப்பி வந்தனர்.

தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி வழக்கு பதிவு செய்து வந்தனர். இது மட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சப் டிவிசன்களில் உள்ள போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரும் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து விசாரித்து வந்தனர். ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 4000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News