செய்திகள்
கோப்புபடம்

திட்டமிட்டு படித்ததால் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றேன் - அரசு பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி

Published On 2020-10-18 10:31 GMT   |   Update On 2020-10-18 10:31 GMT
கொரோனா ஊரடங்கு காலத்தில் சரியாக திட்டமிட்டு படித்ததால் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றேன் என அரசு பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி கூறினார்.
திருப்பூர்:

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவு வெளியாகி உள்ளது.

இதில் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 143 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 76 பேர், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 43 பேர் என மொத்தம் 119 ‘நீட்’தேர்வு எழுதினர். இதில் 36 மாணவர்கள், 83 மாணவிகள் அடங்குவர்.

அரசு பள்ளி மாணவி முதலிடம்...

இந்த தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. இதில் 113 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். இந்த நிலையில் இந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அரசு பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதலிடத்தை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியான நந்தினி பிடித்துள்ளார். இவர் 720 மதிப்பெண்களுக்கு 320 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து மாணவி நந்தினி கூறியதாவது:-

எனது தந்தை பெயர் நடராஜன். பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டர். எனது தாயார் சுமதி. எனது சகோதரி சவுந்தர்யா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். நாங்கள் பிச்சம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறோம். நான் இந்த கல்வியாண்டில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பை முடித்தேன். சிறு வயது முதலே எனக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

இதனால் 10-ம் வகுப்பு படிப்பை முடித்ததும், 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் படிப்பை தேர்வு செய்தேன். இதிலும் நன்றாக படித்து வந்தேன். இந்த நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் ‘நீட்’ தேர்வை எதிர்கொண்டேன்.

இதில் அரசு பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி திட்டமிட்டு படித்தேன். இதனால் எளிதாக தேர்ச்சி பெற முடிந்தது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் படித்து வந்தேன். ஆன்லைன் மூலமாக அரசு வழங்கிய பயிற்சியும் உதவியது.

பள்ளி படிப்பு இருந்த காலத்தில் அதிகளவு படிக்க முடியவில்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் படிப்பதற்கு போதிய நேரம் கிடைத்தது. கலந்தாய்வில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், மீண்டும் ஒரு வருடம் நன்றாக படித்து தேர்வை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதில் இன்னும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற முடிவு செய்துள்ளேன். எனக்கு தேர்ச்சி பெற புத்தகங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா உள்பட ஆசிரியர்கள் என பலருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெனிசம் 311 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு படித்த கவுசல்யா என்ற மாணவி 429 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட், ஐ.ஐ.டி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை அளிக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 119 மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். 720-க்கு 113 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாகும். அதன்படி 40 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அவர்களில் நந்தினி, கவுசல்யா, ஜெனிசம் ஆகிய 3 பேர் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறும் பட்சத்தில் இந்த 3 மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News