செய்திகள்
கைது

திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன அதிபர் வீட்டில் திருடிய 2 பேர் கைது

Published On 2021-04-30 20:19 GMT   |   Update On 2021-04-30 20:19 GMT
திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன அதிபர் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 9½ பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீரபாண்டி:

பிரிண்டிங் நிறுவன அதிபர் வீட்டில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலத்தை சேர்ந்தவர் சபியுல்லா (வயது 54). இவர் திருப்பூர் கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகர் பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பிரிண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி தனது குடும்பத்துடன் சபியுல்லா ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அடுத்த நாள் காலை கே.செட்டிபாளையம் பகுதியில் குடியிருக்கும் ஷியத்துல்லா என்பவர் சபியுல்லா வீட்டின் அருகே சென்றுள்ளார். அப்போது சபியுல்லா வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு ஷியத்துல்லா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சபியுல்லாவை செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார்.

இதையடுத்து சுற்றுலா சென்ற சபியுல்லா உடனே வீரபாண்டி திரும்பி வந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் கலைந்து கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 125 பவுன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இந்த திருட்டு குறித்து வீரபாண்டி போலீசில் சபியுல்லா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் திருட்டுபோன வீடுகளில் பதிவான மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச்சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பரத்குமார் ( 32), மற்றும் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அம்மன் நகரை சேர்ந்த அப்துல்ஹக்கீம் (34) ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சபியுல்லா வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை இவர்கள் இருவரும் திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 9½ பவுன் நகையும், ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News