செய்திகள்
எடியூரப்பா

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க எடியூரப்பா உத்தரவு

Published On 2020-11-18 02:10 GMT   |   Update On 2020-11-18 02:10 GMT
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.634 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுமார் 4 மாதங்கள் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதன் பிறகு அரசு பஸ்களின் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனாவுக்கு பயந்து பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பஸ்களில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணிக்கிறார்கள். இதன் காரமணாக அரசு பஸ்களின் கட்டண வசூல், எரிபொருளுக்கு மட்டுமே பயன்படுவதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாத சம்பளம், போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தங்களால் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியவில்லை என்று வேதனையுடன் அவர்களின் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவுகளை வெளியிட்டனர். இதனால் அரசை எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன.

இந்த நிலையில் அடுத்த 3 மாதத்திற்கு தேவையான அளவுக்கு போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.634 கோடியை ஒதுக்க முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அதாவது மொத்த சம்பளத்தில் 75 சதவீதத்தை மாநில அரசும், 25 சதவீதத்தை போக்குவரத்துத்துறையும் வழங்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இந்த நிதி உதவியை வழங்கியதற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு லட்சுமண் சவதி நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News